Published : 07 Oct 2014 10:57 AM
Last Updated : 07 Oct 2014 10:57 AM

போலீஸ்காரர் கொலையில் மற்றொரு போலீஸ்காரர் கைது

போலீஸ்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே நவலை கிராமத்தை சேர்ந்தவர் நேத்ரன் (26). சென்னை ஆயுதப் படையில் போலீஸாக பணியாற்றினார். இவர் திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து பணிக்கு சென்றுவந்தார். இவருக்கு திருமணமாகி மணிமேகலை என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் தருமபுரியில் வசிக்கின்றனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரக ஊழியர் குடியிருப்பில் பாதுகாப்புப் பணியில் இருந்த நேத்ரன் கடந்த 28-ம் தேதி மாயமானார். அவர் எங்கு சென்றார் என்பதே தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் 2 நாட்களுக்கு பின்னர் 30-ம் தேதி இரவு அவரது உடல் சென்னை துறைமுகம் கண்டெய்னர் யார்டு பகுதியில் மீட்கப்பட்டது. அவரை யாரோ கொலை செய்திருப்பது தெரிந்தது. இதுகுறித்து மெரினா போலீஸார் நடத்திய விசாரணையில் எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தது. அவரது செல்போன் எண்ணை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரிடம் கடைசியாக பேசியிருந்தவரும், உடன் பணிபுரியும் சக போலீஸ்காரருமான ஸ்ரீதர் என்பவர் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்தான் நேத்ரனை கொலை செய்தது தெரிந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "நேத்ரனின் மனைவி மணிமேகலையின் தாய் மாமன் மகன்தான் தர். இவர் குடும்பத்துடன் கிருஷ்ணகிரியில் வசிக்கிறார். கடந்த 28-ம் தேதி இரவு நேத்ரனும், ஸ்ரீதரும் மெரினா கடற்கரை அண்ணா சமாதி பின்புறம் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீதர் மறைத்து வைத்திருந்த கத்தியால் நேத்ரனை சரமாரியாக குத்தியிருக்கிறார். அவர் இறந்துபோனதை உறுதி செய்த பின்னர் அங்கிருந்து சென்றிருக்கிறார்.

நேத்ரன், அவரது மனைவி மணிமேகலை, ஸ்ரீதர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையில் கொலை நடந்திருக்கிறது" என்று போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x