Published : 18 Nov 2013 09:47 AM
Last Updated : 18 Nov 2013 09:47 AM
தமிழக்த்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர்.திருவள்ளூரில், தொழிற்சாலை சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து நசுக்கியதில் வட மாநில தொழிலாளர்கள் 6 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் கள்ளக்குறிச்சியில் 2 பேர் பலியாகினர்.
திருவள்ளூரில் சுவர் இடிந்து விபத்து:
திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையை அடுத்துள்ள சின்னப்புலியூரில் மைக்கோ பிளாஸ்டிக் இன்டஸ்டீரியஸ்’ என்ற பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமானப் பணியில் வடமாநிலத்தைச் சேர்ந்த 26 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள், தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் அருகிலேயே குடிசை அமைத்து தங்கியிருந்தனர்.
இந்நிலையில், சனிக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக, இரவு 9 மணி அளவில் தொழிற்சா லையின் சுற்றுச் சுவர் 50 அடி நீளத்துக்கு திடீரென இடிந்து குடிசை மீது விழுந்தது. இதில் உள்ளே இருந்த ஓடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சோனு (30), சுக்தேவ் (20), பல்ராம் (19), ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மன்தீப் குமார் (18), நாராயணன் (18), பீ்கார் மாநிலத்தைச் சேர்ந்த பாப் குமார் (20) ஆகிய 6 தொழிலாளர்களும் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் நரேஷ் (25), லோகன் (50), உமேஷ் (35), உதயசங்கர் (16), சன்னியாசி (20), சாமுரு (19), சந்தோஷ் (33), சாம் (50), சஞ்சய் (22) ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களுக்கு பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். புகாரின்பேரில் தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நிவாரணம் அறிவிப்பு:
மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், ‘தி இந்து’ நிருபருக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் ஆறு பேரின் குடும்பத்தினருக்கும், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா 1.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். வெளி மாநிலங்களிலிருந்து அழைத்து வரப்படும் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்குவதற்கு உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டியது ஒப்பந்ததாரர்களின் பொறுப்பு. அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
விழுப்புரத்தில் இருவர் பலி:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மரக்காணம் அடுத்த கரிப்பாளையத்தை சேர்ந்த அரிராம் மகன் ஏழுமலை (18). இவர் சனிக்கிழமைஇலுப்பு தோப்பு பகுதியில் ஆடு மேய்த்தார். மதியம் 1 மணிக்குக் காற்று மழை அதிகரித்ததால், மரத்தடியில் ஒதுங்கியபோது அவர் மீது மரம் முறிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி அருகே புக்கரவாரி கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுணன் என்பவர் மனைவி அய்யம்மாள் (65). இவர் தனது மகன் முனுசாமியுடன் கூரை வீட்டில் வசித்து வருகி றார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்தபோது சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த அய்யம்மாளை விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வெள்ளக்காடானது சென்னை:
சனிக்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் வெள்ளக்காடானது. பல்லாங்குழி சாலைகளில் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றன. இதனால் பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகலில் நாகப்பட்டினம் அருகே குறைந்த காற்றழுத்த மண்டலம் கரையை கடந்தது. இதைத் தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
வீடுகளில் முடங்கிய மக்கள்:
சென்னையில் சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை, அதிகாலை வரை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் பல பகுதிகளிலும் கன மழை கொட்டித் தீர்த்தது.
அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகின. சாலைகள், தெருக்களில் முட்டியளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
விடுமுறை நாள் என்பதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். வழக்கமாக வார விடுமுறையை வெளியில் போய் கொண்டாடுபவர்களும் மழைக்கு பயந்து வரவில்லை. இதனால் பஸ், ரயில்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது.
போக்குவரத்து நெரிசல்:
பூந்தமல்லி நெடுஞ்சாலை, புரசை வாக்கம் நெடுஞ்சாலை, அண்ணா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, நெல்சன் மாணிக்கம் ரோடு, என்.எஸ்.சி.போஸ் ரோடு, அடையாறு எல்.பி.ரோடு, ராஜீவ் காந்தி சாலை (ஓஎம்ஆர்) உள்ளிட்ட பிரதான சாலைகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்லாங்குழிபோல மாறிய சாலை களில் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றன. போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
தயாராக இல்லாத மாநகராட்சி:
பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களே மழைநீர் வடிகால் அடைப்பை சரி செய்தனர். சாலைகளில் தேங்கிய தண்ணீரை கால்வாய்க்கு திருப்பி விட்டனர். புயல் சின்னம் காரணமாக வடமாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்ததும், நிலைமையை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாக மாநகராட்சி அறிவித்தது. ஆனால், ஒருநாள் மழைக்கே சென்னை வெள்ளக்காடான நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக செயல்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கால்வாய் அடைப்பு:
மாநகராட்சிப் பகுதிகளில் பல இடங்களில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடக்கவில்லை. ஏற்கனவே நடந்து முடிந்த பகுதிகளில் கால்வாய் முறையாக பராமரிக்கப்படவில்லை. அதனால், மழைநீர் வடிகால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது.போனில் தகவல் கொடுத்தும் அடைப்பை சரிசெய்ய மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக வரவில்லை என மக்கள் கூறினர். அதனால் வேறுவழியின்றி அந்தந்தப் பகுதி மக்களே குச்சியால் குத்தி அடைப்பை சரிசெய்தனர்.
டாஸ்மாக்கில் கூட்டம்: அடைமழையால் ஊட்டி போல குளிர்ச்சியாக மாறியது சென்னை. தெருக்களில் ஸ்வட்டர் மற்றும் பாய் விற்பனை அமோகமாக இருந்தது. டீக்கடைகளிலும் டாஸ்மாக் கடைகளி லும் கூட்டம் அதிகமாக இருந்தது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது:
சென்னை புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த தொடர் மழையால் சேலையூர், கேம்ப்ரோடு, காமராஜபுரம், செம்பாக்கம், சித்தாலப்பாக்கம், சந்தோஷபுரம், மேடவாக்கம்கூட்டுரோடு, மேடவாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் செல்ல வழியில்லாமல் குளம் போல தேங்கியுள்ளது.
பலத்த மழையால் கேம்ப் ரோடு, மேடவாக்கம் பகுதிகளில் போக்குவரத்து சிக்னல் இயங்கவில்லை. வேளச்சேரி பேருந்து நிலையத்தில் மாநகர பேருந்து பழுதாகி நின்றது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அனைத்தும் மெதுவாக ஊர்ந்து சென்றன.
கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம், மாடம்பாக்கம், நாராயணபுரம், பாலாஜி நகர், செக்போஸ்ட் போன்ற பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் உள்ளே புகுந்துவிட்டது. வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல், வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
போலீஸா காரணம் ?
சென்னையில் ஆற்காடு ரோடு, வள்ளுவர் கோட்டம் சாலை, தியாகராயா சாலை, ஆர்.கே.மடம் சாலை உள்பட 29 முக்கிய பேருந்து செல்லும் சாலைகளில் மழைநீர் வடிகால் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.
இப்பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் இருப்பதாலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதாலும் இந்த சாலைகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற போலீசார் அனுமதி அளிக்க தாமதம் செய்கின்றனர்.
எனவே இந்தப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறவில்லை. அப்பகுதிகளில் மழைநீர் தேங்குகிறது என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT