Published : 01 Dec 2013 10:51 AM
Last Updated : 01 Dec 2013 10:51 AM
இலங்கையில் இனப் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை தண்டிக்கும் வரை இந்திய அரசு ஓயாது என்று ராஜிவ் காந்தியின் பெயரால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சூளுரைத்துள்ளார்.
'இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் மத்திய அரசின் நிலையும்' என்ற தலைப்பில், சென்னையில் சனிக்கிழமை கருத்தரங்கம் நடந்தது. இதில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
இலங்கைப் போரில் 65 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இலங்கை உள்நாட்டுப் போரை நிறுத்த, இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், இலங்கை அரசும் புலிகள் தரப்பிலும் அதற்கு செவிசாய்க்கவில்லை.
இந்திய அரசின் முயற்சிக்கு உடன்பட்டிருந்தால், பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார். இனப் படுகொலை நடந்திருக்காது. அதற்காக இனப் படுகொலையைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இதுகுறித்து விரிவான, தெளிவான, நேர்மையான, உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் விசாரணை நடத்தி, குற்றவாளிகளை தண்டிக்கும் வரை, இந்திய அரசு ஓயாது. இலங்கைத் தமிழர்களை நாங்கள் கைவிட மாட்டோம் என்று ராஜீவ் காந்தியின் பெயரால் சூளுரைக்கிறோம்.
இலங்கை இறையாண்மை பெற்ற தனி நாடு. அங்கு, சிறுபான்மையினர் தனி நாடு கேட்க முடியாது. இந்தியாவில் காஷ்மீர், நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் தனி நாடு கோருகின்றனர். அதை சரி என்று இந்தியா ஏற்றுக் கொள்கிறதா? அப்படித்தான் இலங்கை ஏற்கவில்லை. இதில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது. அறிவுப்பூர்வமாக அரசியல் முடிவெடுக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம், வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு, தமிழர்களின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் பெற்றுத் தரும் 13-வது திருத்தத்தை இலங்கை அரசு நிறைவேற்றும் வரை இந்தியா ஓயாது.
ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து, இந்திய அரசு வாக்களித்தது. அதே நேரம், இலங்கைக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர பா.ஜ.க.விடம் ஆதரவு கேட்டபோது திட்டவட்ட மாக மறுத்துவிட்டனர். இப்படிப் பட்ட பா.ஜ.க.வினர் ஆட்சிக்கு வந்துதான் இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கப் போகிறார்களா?
பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு இதுவரை சுமார் 500 கோடி ரூபாய் வரை பல வகைகளில், இந்திய அரசு உதவியுள்ளது. நடப்பாண்டில் ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது. தமிழர்களை ஒருபோதும் கைவிட மாட்டோம். இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
புலிகளை குழப்பிய வைகோ, நெடுமாறன்
கருத்தரங்கில் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, “இலங்கைப் போரில் இதற்கு மேல் சமாளிக்க முடியாது என்றதும், புலிகள் தரப்பில் நடேசன் மூலமாக, குமரன் பத்மநாதன் வழியே இந்திய அரசிடம் உதவி கேட்டனர். மத்திய அமைச்சர் சிதம்பரம் அதற்கு முயற்சி மேற்கொண்டு, புலிகள் தரப்பிலும் இலங்கை தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டுக்கு வர முயற்சித்தார். ஆனால், தமிழகத்தில் உள்ள பழ.நெடுமாறனும் வைகோவும், 'நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். அவர்கள் மூலம் தனி நாடு பெறலாம்' என்று கூறி புலிகளை குழப்பிவிட்டனர். அதனால் நிலைமை மாறிப்போனது. இதற்கு ஆதாரங்கள் உள்ளன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT