Published : 24 Oct 2014 10:56 AM
Last Updated : 24 Oct 2014 10:56 AM
தீபாவளி தினத்தன்று மெரினா கடற்கரையில் குளித்த 2 சகோதரர்கள் உட்பட 3 மாணவர்கள் கடலில் மூழ்கி பலியானர்கள்.
சென்னை கோட்டூர்புரம் குருவாயூரப் பன் தெருவில் வசிப்பவர் சந்திரசேகரன். இவரது மகன்கள் பரத்(16), பாலாஜி(16). இரட்டையர்களான இவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த குணசேகர் என்பவரின் மகன் வெங்கடேசனுடன்(16) தீபாவளியன்று மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளனர். சிறிது நேரம் கடலின் ஓரத்தில் நின்று விளையாடியவர்கள், குஷியில் கொஞ்சம் கொஞ்சமாக கடலின் ஆழமான பகுதிக்கு செல்ல ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் ஒரு பெரிய அலையில் சிக்கிய அவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
கடலில் தத்தளித்த அவர்களை மீட்க அருகில் இருந்தவர்கள் செய்த முயற்சி பலனளிக்கவில்லை. உடனே அண்ணா சதுக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள், கடலோர காவல் படையினர் மற்றும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் 3 படகுகளில் அவர்களை தேடினர். ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் நேற்று காலையில் அவர்களின் உடல்கள் பட்டினப்பாக்கம் மற்றும் சாந்தோம் கடற்கரையில் கரை ஒதுங்கின. இதைத்தொடர்ந்து அவர் களின் உடல்கள் மீட்கப்பட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஒரே பகுதியில் வசிக்கும், ஒரே வயதுடைய 3 பேர் ஒரே நேரத்தில் இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒரே பிரசவத்தில் பிறந்து ஒன்றாகவே இறந்த இரட்டை சகோதரர்களை இழந்த அவர்களின் பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
சென்னையில் ஆண்டுக்கு 1,500 பேர் கடலில் மூழ்கி இறக்கின்றனர். இதை தடுக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏன் என்று அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
சென்னையில் 75 கிலோ மீட்டர் கடற்கரை உள்ளது. அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது இயலாத காரியம். கடலுக்குள் ஓரளவுக்கு மேல் செல்லக்கூடாது என்கிற விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வேண்டும். கடலுக்குள் செல்லாதீர்கள் என்று எத்தனை முறை எச்சரித்தாலும் பொதுமக்கள் அதை மீறுவதே உயிரிழப்புகளுக்கு காரணம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT