Published : 06 Nov 2013 11:54 AM
Last Updated : 06 Nov 2013 11:54 AM
2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ளார்.
விழுப்புரம் (தனி) தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், மயிலாடுதுறை தொகுதியில் மாநில துணைப் பொதுச் செயலாளர், க. அகோரம் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 21- ஆம் தேதி, தமது கட்சித் தலைமையில் புதிதாக சமூக ஜனநாயகக் கூட்டணி தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ராமதாஸ், மக்களவைத் தேர்தலுக்கான பாமக வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி, நாடாளுமன்றத் தேர்தலில், கோ.க.மணி கிருஷ்ணகிரி தொகுதியிலும், ஆர்.வேலு அரக்கோணம் தொகுதியிலும், ஆரணி தொகுதியில் ஏ.கே.மூர்த்தியும், சேலம் தொகுதியில் பா.ம.க. இளைஞர் அணி செயலர் அருளும் போட்டியிடுவார்கள். புதுச்சேரி தொகுதியில் ஆர்.கே.ஆர். அனந்தராமன் போட்டியிடுவார் என்று அவர் தெரிவித்திருந்தார்.
சமூக ஜனநாயகக் கூட்டணி:
மேலும், பாமக தலைமையில் சமூக ஜனநாயகக் கூட்டணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளோம். இதற்கான முயற்சி 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கட்சியின் பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி எடுக்கப்பட்டது. தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதே எங்கள் கூட்டணியின் கொள்கை. இதை ஏற்றுக் கொண்ட கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.
2016-ல் நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்று அணியை உருவாக்கி, தமிழக மக்கள் ஆதரவோடு வெற்றி பெறுவோம். ஏற்காடு இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, பாமக போட்டியிடாது. யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதும் இல்லை" என்றும் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT