Published : 28 Oct 2013 01:12 PM
Last Updated : 28 Oct 2013 01:12 PM
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானை சவாரி நிறுத்தப்பட்டதால் பூங்காவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், பார்வையாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
உயிரியில் பூங்காவில் கடந்த 1985-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை யானை சவாரி மற்றும் ஒட்டக சவாரிகள் இருந்தன. இதில் சிறுவர்கள், பெரியவர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் யானை மற்றும் ஒட்டகம் மீது சவாரி செய்து வந்தனர். ஆனால் கடந்த 1996-ம் ஆண்டின் இடையிலேயே சில காரணங்களுக்காக யானை சவாரியும், ஒட்டக சவாரியும் நிறுத்தப்பட்டன.
பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் யானை சவாரி திட்டத்தை பூங்காவில் ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதற்காக கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை டாப்சிலிப் பகுதியில் இருந்து 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி அஸ்வினி (22) , பாரி (26) என்ற 2 யானைகள் லாரி மூலம் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன.
இதைத் தொடர்ந்து, இந்த 2 யானைகளை வைத்து 2008-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி பூங்காவில் யானை சவாரி தொடங்கி நடைபெற்று வந்தது. சில மாதங்கள் கழித்து பாரி என்ற ஆண் யானைக்கு மதம் பிடித்ததால் அதை டாப்சிலிப் பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர். அஸ்வினி என்ற பெண் யானை மட்டுமே பார்வையாளர்களை ஏற்றி யானை சவாரி செய்து வந்தது.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 21-ம் தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அஸ்வினி மரணம் அடைந்தது. இதனால் யானை சவாரி நிறுத்தப்பட்டது.
சென்னையை சேர்ந்த எஸ்.சிவரஞ்சன் என்பவர் கூறுகையில்:
நான் வருடத்தில் 2 முறை குடும்பத்துடன் வண்டலூர் பூங்காவுக்கு வரும்போது யானை சவாரி செய்வேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு பூங்காவுக்குக் குடும்பத்துடன் வந்தபோது யானை சவாரி நிறுத்தப்பட்டடு 10 மாதங்கள் ஆனது தெரியவந்தது. இது எங்களுக்கு வருத்தமாக இருந்தது. சென்னைக்கு அருகில் வேறு எங்கும் யானை சவாரி செய்ய முடியாது. எனவே மீண்டும் யானை சவாரி திட்டம் கொண்டு வரவேண்டும் என்றார்.
பூங்கா அதிகாரி விளக்கம்
யானை சவாரி செய்ய டாப்சிலிப் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட யானைகளுக்கு இங்குள்ள தட்டவெப்ப சூழ்நிலை ஒத்துக்கொள்ளாததால் உற்சாகம் குறைந்து காணப்பட்டன. மேலும், யானைகளுக்கு உடல் நிலையில் கோளாறு ஏற்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி யானை சவாரி நிறுத்தப்பட்டு வந்தன. பூங்கா ஊழியர்கள் யானைகளுக்கு நல்ல பயிற்சியும், ஆரோக்கியமான உணவும் தந்தால் கூட யானைகள் டாப்சிலிப் பகுதியில் இருப்பது போல இங்கு இருப்பது இல்லை. எனவே இனி வரும் காலங்களில் யானை சவாரி திட்டம் தொடங்கப்படுவது சாத்தியமா என தெரியவில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT