Published : 14 Oct 2014 02:55 PM
Last Updated : 14 Oct 2014 02:55 PM
ஆர்.ஆர்.சி. தேர்வில் ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது சரியல்ல என்றும், இந்த விவகாரத்தில் ரயில்வே அமைச்சர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினரும், எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "Employment Notice No. 02/2013 Dated 21.9.2013-ல் தான் இந்த அநியாயம் அரங்கேறியுள்ளது. 5450 பதவிகளுக்கான குரூப் 'டி' காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் வருகின்ற 2.11.2014 முதல் ஐந்து கட்டமாக நடைபெறவுள்ளது. குரூப் 'டி' காலியிடங்களை நிரப்புவதற்கான ரெயில்வே ரெக்ரூட்மென்ட் செல் (RRC) தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்களின் மனுக்கள் தெற்கு ரெயில்வே ஆர்.ஆர்.சி நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
11 லட்சத்திற்கு மேல் விண்ணப்பப் பவடிங்கள் வந்த நிலையில், விண்ணப்பங்களை குறைப்பதற்காக நியாயமற்ற வழிமுறைகளை ரயில்வே நிர்வாகம் கடைபிடித்துள்ளது.
நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தெற்கு ரெயில்வே நிர்வாகம் கூறும் காரணம் Code Number 25. இது இந்தமுறைதான் புதிதாக சேர்க்கப்பட்டு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்களுக்கு அட்டஸ்டேஷன் இல்லையென காரணம் கூறி நிராகரித்துள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கில் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தமிழக இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க சான்றிதழ்களில் அட்டஸ்டேஷன் தேவையில்லையென மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகும் ஆயிரக்கணக்கானோரின் விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரெயில்வே நிர்வாகத்திடம் விசாரித்தபோது அவர்கள் ஆர்.ஆர்.சி. நோட்டிபிகேஷன் வெளியிடும்போது அரசு இந்த உத்தரவை பிறப்பிக்கவில்லையெனவும், ஆகவே தற்போது அட்டஸ்டேஷன் பெறாமல் சுய அத்தாட்சி செய்த விண்ணப்பங்களை நிராகரிப்பது சரிதான் என உயரதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.
ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ஆர்.ஆர்.சி. நோட்டிபிகேஷனில் அட்டஸ்டேஷன் வேண்டுமென உள்ளது. ஆனால் தமிழில் வெளிவந்த எம்ப்ளாய்மென்ட் நியூஸ் உட்பட பல தினசரி மற்றும் விளம்பரங்களில் சுய அத்தாட்சி போதுமென விளம்பரங்கள் வெளிவந்துள்ளன.
மேலே குறிப்பிட்டுள்ள இதே ஆங்கில நோட்டிபிகேஷனில்கூட ஆன்லைனில் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கலாமென குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறு ஆன் லைனில் விண்ணப்பப் படிவங்களை அனுப்பியவர்கள் சுய அட்டஸ்டேஷன் செய்துதான் விண்ணப்பித்துள்ளனர். அவர்களது விண்ணப்பப் பவடிங்கள் ஏற்கப்பட்டு தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு பொருந்தக்கூடிய இந்த சட்டம் தமிழக தினசரிகள் மற்றும் விளம்பரங்களைப் பார்த்து அனுப்பிய தமிழக இளைஞர்களுக்கு பொருத்தப்படாதது முறையல்ல.
கடந்த முறை நடைபெற்ற ஆர்.ஆர்.சி. தேர்வில் எம்ப்ளாய்மென்ட் நோட்டீஸ் எண். 01/2013 தேதி 24.8.2012 நோட்டிபிகேஷனில் சான்றிதழ்களில் சுய அத்தாட்சி செய்து அனுப்பிய அத்தனை விண்ணப்பப் படிவங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது, ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டு தேர்வு முடித்து பலர் தேர்ச்சியும் பெற்று தற்போது ரெயில்வேயில் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த முறை பொருந்திய இந்த சட்டம் இந்தமுறை மறுக்கப்பட்டது ஏன்? என்ற வினா தமிழக இளைஞர்களின் மனதில் தோன்றுகிறது.
இந்திய ரெயில்வே முழுவதும் குரூப் 'டி' பணியிடங்களில் தேர்வு நடைபெறும்போது அந்தந்த மாநிலத்தில் உள்ளவர்கள் அதிகமாக பயன்பெற வேண்டுமென்பதால்தான், முன்பு மும்பை மற்றும் கர்நாடகாவில் ஆர்.ஆர்.பி. தேர்வின் போது நடைபெற்ற வெளிமாநிலத்தவரை விரட்டியடிக்கும் கலாட்டாவினால்தான் ஆர்.ஆர்.சி. என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அந்தந்த மாநிலத்தவர்
பயன்பெறும் வகையில் ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் அந்தந்த ரெயில்வேக்களில் ஆர்.ஆர்.சி. தேர்வு நடைபெற்றது.
தற்போது இதுவும் நிறுத்தப்பட்டு தெற்கு ரெயில்வேக்கு மட்டும் தனியாக ஆர்.ஆர்.சி. தேர்வு நடத்தப்படுவதும், ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்களின் விண்ணப்பங்களை நிராகரிக்கப்பட்டதும் தமிழக மக்கள் மத்தியில் அதிருப்தியையும், கோபத்தையும் உருவாக்கும்.
ஆகவே, ரெயில்வே அமைச்சர் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு சுயசான்றிதழ் அளித்து விண்ணப்பித்துள்ள அத்தனை பேருக்கும் தேர்வில் பங்கேற்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT