Published : 21 Nov 2013 12:00 AM
Last Updated : 21 Nov 2013 12:00 AM
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் புதிதாகக் கட்டப்படும், 500 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையப் பணிகளை கோடை காலத்திற்குள் முடிக்குமாறு, தமிழக மின் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவைத் தாண்டி, கட்டுமானப் பணிகள் தாமதம் ஆவதால், மின் தொகுப்பில் அடிக்கடி இட நெருக்கடி ஏற்படுவதாகவும், மத்திய மின்சார ஆணையத்தில் முறையிட்டுள்ளது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில், ரூ.2,030 கோடி மதிப்பீட்டில், நெய்வேலியில் தலா 250 மெகாவாட் திறனில், இரண்டு அலகுகள் கொண்ட இரண்டாம் நிலை விரிவாக்க மின் நிலையம் கட்டப்படுகிறது. இந்த நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 2011ம் ஆண்டிலேயே முடிக்கப்பட வேண்டும்.
ஆனால், பல்வேறு காரணங்களால் கட்டுமான மற்றும் தொழில்நுட்பப் பணிகள் நிறைவடைவது காலதாமதமாகிறது. இதுகுறித்து, மத்திய மின் துறை அமைச்சகம், மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் மற்றும் மத்திய கனரகத் தொழில்கள் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்து, மத்திய மின் துறையிடம் அறிக்கையும் அனுப்பியுள்ளனர்.
கட்டுமான மற்றும் தொழில்நுட்பப் பணிகளை பாரத மிகுமின் நிறுவனத்திடம் (பெல்) ஒப்படைத்துள்ளனர். இந்நிறுவனம் நாடு முழுவதும் 25க்கும் மேற்பட்ட மின் நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதால், உதிரிப் பாகங்கள் கிடைப்பதிலும், தொழில்நுட்பப் பணிகளை தீவிரப்படுத்துவதிலும், காலதாமதம் ஏற்படுவதாக, நெய்வேலி அனல் மின் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புதிய நிலையத்திலிருந்து மொத்த மின் உற்பத்தியான 500 மெகாவாட்டில், தமிழகத்துக்கு 230 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். கடந்த 2011ம் ஆண்டிலேயே, இந்த மின் நிலையத்தில் உற்பத்தி துவங்கியிருக்க வேண்டும். ஆனால், 2 ஆண்டுகளாக பணிகள் முடியாமல் காலதாமதமாகிறது.
இதுகுறித்து, மத்திய மின்சார ஆணையத்துக்கு, தமிழக மின்வாரியம் கடிதம் எழுதியுள்ளது. அதில், நெய்வேலி புதிய மின் நிலையப் பணிகளை வரும் கோடை காலத்துக்குள் (மார்ச் 2014) முடித்து மின்சாரம் தர உத்தரவிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இதேபோல், மின்சார ஆணையத்தின் இயக்குனர் ரிஷிகா சரண், என்.எல்.சி. நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், நெய்வேலி இரண்டாம் நிலை விரிவாக்க நிலையத்தில், நடப்பு நிதி ஆண்டில், 1009 மில்லியன் யூனிட்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஒரு யூனிட் கூட உற்பத்தி செய்யவில்லை. எனவே, விரைவில் பணிகளை முடித்து வர்த்தக ரீதியிலான உற்பத்தியைத் துவங்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT