Published : 07 Oct 2014 10:57 AM
Last Updated : 07 Oct 2014 10:57 AM
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற முதலில் 90 மதிப்பெண் (150-க்கு) என்றும் பின்னர் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்து 82 மதிப்பெண் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் 72 ஆயிரத்துக்கும் மேற்பேட்டோர் தேர்ச்சி பெற்றனர். 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்தது. இந்த நிலையில், ஆசிரியர் நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில், பள்ளிக் கல்வித்துறைக்கு 10,531 பட்டதாரி ஆசிரியர்களும், தொடக்கக் கல்வித் துறைக்கு 167 பட்டதாரி ஆசிரியர்கள்,1649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 1,816 பேரும் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு கடந்த 25-ம் தேதி பணிநியமன ஆணை வழங்கப்பட்டு, அவர்கள் பணியில் சேர்ந்துவிட்டனர்.
அடுத்ததாக, ஆதி திராவிடர் நலப் பள்ளிகளுக்கும், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கும் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களின் தேர்வுபட்டியல் வெளியிடப்பட வேண்டியுள்ளது.
இதற்கிடையே, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை விதித்துள்ளது. ஆனால், அந்த சலுகையின் மூலம் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துவிட்ட ஆசிரியர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சி-டெட்), எஸ்சி, எஸ்டி வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) ஆகிய ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதை அடிப்படையாக வைத்துத்தான் தமிழக அரசும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்தது. ஆனால், தற்போது, 5 சதவீத மதிப்பெண் தளர்வுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு இன்னும் மேல்முறையீடு செய்யவில்லை.
இதனால், 2-வது தேர்வு பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம், அடுத்த ஆசிரியர் நியமனத்தில், தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் மற்றும் அதற்கும் மேல் பெற்று தேர்ச்சி பெற்றவர்களை மட்டும் பரிசீலிக்க வேண்டுமா அல்லது 5 சதவீத மதிப்பெண் சலுகையில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களையும் பரிசீலிக்க வேண்டுமா என்பது தெரியாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் குழம்பிப் போயுள்ளது.
இடைநிலை ஆசிரியர் பணியில் மட்டும் ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் 669 காலியிடங்களும், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 64 காலியிடங்களும் நிரப்பப்பட வேண்டியுள்ளது. மேலும் இந்த இரு வகை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிலும் கணிசமான காலியிடங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT