ராமதாஸ், அன்புமணிக்கு பாதுகாப்பு வேண்டும் என பாமக தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு 2 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி தாக்கல் செய்த மனுவில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு அரசு வழங்கிய பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்றும், அச்சுறுத்தல் உள்ளதால் இருவருக்கும் மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணையின்போது, டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவர்கள் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கும் செல்ல வேண்டியிருப்பதால் அரசு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பாமக சார்பில் வாதிடப்பட்டது.
அரசு தரப்பிலோ, பாதுகாப்பு கமிட்டி கூட்டம் கடந்த மாதம் 19–ம் தேதி கூடியது. காவல்துறை உயர் அதிகாரிகளும், மத்திய அரசு கண்காணிப்பு அதிகாரிகளும் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில், அச்சுறுத்தல் எதுவும் இல்லாததால் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து இரண்டு வாரத்தில் விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
WRITE A COMMENT