Last Updated : 01 Dec, 2013 11:36 AM

 

Published : 01 Dec 2013 11:36 AM
Last Updated : 01 Dec 2013 11:36 AM

ஏற்காடு பிரச்சாரம் நாளை ஓய்கிறது; நோட்டா அதிகரிக்க வாய்ப்பு

ஏற்காடு இடைத்தேர்தலிலுக்கான தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் (திங்கள்கிழமை) ஓய்கிறது. இதில் சுயேட்சை வேட்பாளர்கள் அடக்கி வாசிக்கும் நிலையில், பிரதான கட்சி வேட்பாளர்கள் பிரச்சார வியூகம் அமைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்காடு இடைத்தேர்தல் வரும் 4ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க. தி.மு.க. கட்சிகளிடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட 35 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வேட்புமனு பரிசீலனையின்போது 23 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 12 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உழைப்பாளர் மக்கள் கட்சியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் செல்வம், தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து, வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

அ.தி.மு.க., வேட்பாளர் சரோஜா, தி.மு.க., வேட்பாளர் மாறன் மற்றும் ஒன்பது சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 11 வேட்பாளர்கள் ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

சுயேட்சை வேட்பாளர்கள் ஒன்பது பேரும் சின்னங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. சுயேட்சைகள் அனைவரும் பழங்குடியினர் என்பதால், அவரவர் உறவினர்கள் ஒட்டுகளை மட்டுமே நம்பி களத்தில் உள்ளனர்.

சுயேட்சைகளின் பிரச்சாரம் பொதுமக்களை சென்றடையாத நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய கட்சிகளின் ஓட்டுகளுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை. இதனால், இரண்டு கட்சி வேட்பாளர்களும் ஏற்காடு தொகுதி முழுவதும் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒருநாள் சூறாவளி பிரச்சாரம் செய்தார். இவரைத் தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் நடிகர், நடிகைகள் என திரையுலக பட்டாளம் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் நடிகர், நடிகையர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அ.தி.மு.க., தி.மு.க., கட்சியினர் மக்களிடம் வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற, போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

நோட்டா பதிவு அதிகரிக்க வாய்ப்பு

ஏற்காடு இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா பட்டன் பொருத்தப்பட உள்ளது. தே.மு.தி.க. பா.ம.க. ம.தி.மு.க. காங். பா.ஜ. மற்றும் உதிரிகட்சிகள் இடை தேர்தலில் போட்டியிடாத நிலையில், நோட்டா பட்டனை பயன்படுத்த கூடுதல் வாய்ப்புள்ளது.

உலகில் மிகப்பெரும் ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது. எனவே, வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை என அரசு சார்பில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் சமயத்தில் தொகுதி பக்கம் தலைகாட்டும் அரசியல்வாதிகள் வஞ்ச புன்னகையுடன், பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஓட்டுகளை பெற்று செல்கின்றனர். அதன்பின் மக்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. மக்களாட்சி முறையில் மக்களால் தேர்வு செய்யப்படும் மன்னர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதும், அவர்களைத் தேர்வு செய்யும் மக்கள் பட்டினியில் வாடுவதும் நடந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், அரசின் வெளிப்படை தன்மையைக் காட்டும் விதமாக தகவல் அறியும் உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது. அதேபோல, வாக்களிப்பது எவ்வாறு மக்களின் ஜனநாயக கடமையாக உள்ளதோ அதேபோல, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் தனக்கு பிடித்தவர் ஒருவரும் இல்லை என்பதை பதிவு செய்யும் உரிமையை உச்சநீதிமன்றம் மக்களுக்கு அளித்துள்ளது.

இதன்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், நோட்டா பட்டனை பொருத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நோட்டா பட்டன் இல்லாத சமயத்தில் வாக்களிக்க வாக்குச் சாவடி மையத்துக்கு செல்லாமல் தவிர்ப்பவர்கள் உண்டு. இது போன்ற சூழ்நிலையில் கள்ள ஓட்டுப்போடும் முறை அதிகரித்தது.

தற்போது, ஏற்காடு இடைத் தேர்தலில் நோட்டா பட்டன் பொருத்த நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது. இதனால், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை வாக்காளர்கள் பயன்படுத்த முடியும். ஏற்கனவே, தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள், ஏற்காடு இடைத்தேர்தலில் நோட்டா பட்டனை பயன்படுத்த வேண்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடாத தே.மு.தி.க., காங்., ம.தி.மு.க., பா.ம.க., பா.ஜ., மற்றும் உதிரி கட்சிகள் ஆளும்கட்சி, எதிர்கட்சிக்கு வாக்களிக்க விருப்பமில்லாத நிலையில் நோட்டா பட்டனை பயன்படுத்த வாய்ப்பு கூடுதலாக உள்ளது. ஏற்காடு இடைத்தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்ப மில்லை என பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால், தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் தலைவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x