Published : 04 Nov 2013 10:06 AM Last Updated : 04 Nov 2013 10:06 AM
தமிழகத்தில் கன மழை நீடிக்கும்; புதுவை, விழுப்புரம் பள்ளிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விடாமல் பெய்து வரும் கன மழையால், விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட நேற்றிரவு தொடங்கி இடங்களில் கன மழை பெய்தது. சென்னையில் பெய்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அருகே உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கன்னியாகுமரி அருகே நிலை கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழகத்தின் அநேக இடங்களில் குறிப்பாக சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கண்டிப்பாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்கு பருவ மழையால் சராசரியை விட குறைவாகவே அக்டோபர் மாதம் மழை பெய்துள்ளது. தற்போது நவம்பர் மாத தொடக்கத்திலேயே 10.செ.மீ. வரை மழை பெய்திருப்பதும், மேலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதும் அக்டோபர் மாத பற்றாக்குறையை சமன் செய்யும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
சென்னையில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு சனிக்கிழமை இரவும் ஞாயிற்றுக்கிழமை காலையும் பல இடங்களில் நல்ல மழை பெய்து சென்னையை குளிர்வித்துள்ளது.
WRITE A COMMENT