Published : 30 Jun 2017 07:59 AM
Last Updated : 30 Jun 2017 07:59 AM
கூடங்குளத்தில் ரூ.39,747 கோடி செலவில் அமைக்கப்படும் 3,4-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் நேற்று தொடங்கின. இதில், 3-வது அணுஉலையில் அடுத்த 69 மாதங்களில் மின் உற்பத்தி தொடங்கும் என்று இந்திய அணுசக்தி திட்டங்களுக்கான இயக்குநர் பானர்ஜி தெரிவித்தார்.
கூடங்குளத்தில் தற்போது தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள இரு அணு உலைகள் மின்னுற்பத்தி செய்து வருகின்றன. இங்கு மேலும் 4 அணு உலைகள் அமைத்து அணு உலை பூங்காவாக மாற்றும் நடவடிக்கைகள் வேகம் எடுத் துள்ளன. அதன்படி 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் நேற்று தொடங்கின.
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நேற்று நடைபெற்ற எளிமையான நிகழ்ச்சியில், இந்திய அணுசக்தி கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சதீஷ்குமார் சர்மா பணிகளைத் தொடங்கி வைத்தார். திட்ட இயக்குநர் ஆர்.பானர்ஜி, செயல் இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் எஸ்.வி. ஜின்னா, ரஷ்ய அணுசக்தித்துறை விஞ்ஞானிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு அணுசக்தி திட்டங்களுக்கான இயக்குநர் பானர்ஜி கூறியதாவது:
மேக் இன் இந்தியா
இங்கு, 3-வது அணு உலை யில் 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அதாவது இன்னும் 69 மாதங்களில் மின் உற்பத்தி தொடங்கும். அதற்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் 4-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும். இந்த அணுஉலைகளின் கட்டுமானங்களுக்கு தேவையான உபகரணங்களை ரஷ்யாவிடமிருந்து குறிப்பிட்ட காலத்தில் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் 3 மற்றும் 4-வது அணுஉலை கட்டுமான பணிகளில் உள்நாட்டு உற்பத்தி பொருட்களும் பயன்படுத்தப்படவுள்ளன. குறிப்பாக 4-வது அணுஉலை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களில் 30 சதவீதம் உள்நாட்டு உற்பத்தியாகவே இருக்கும். 5 மற்றும் 6-வது அணுஉலைகளை இங்கு அமைப்பதற்காக இந்தி யாவும், ரஷ்யாவும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இந்த அணுஉலைகளில் மேலும் 20 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி பொருட்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT