Published : 24 Sep 2013 10:07 AM
Last Updated : 24 Sep 2013 10:07 AM

தமிழக மீனவர்கள் கைது சம்பவம் தொடரக்கூடாது

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடரக்கூடாது என்று இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

‘இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கடுமையாக தாக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படும் தமிழக மீனவர்களின் வேதனையை தாங்கள் அறிவீர்கள்.

இத்தகைய கொடுமையான, சித்ரவதை செயல்களில் இலங்கை அரசும் அந்நாட்டு கடற்படையும் திட்டமிட்டு ஈடுபடுகின்றன என்று தமிழக மக்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் நினைக்கிறார்கள். தமிழக மக்களின் இந்தக் கருத்தை உதாசீணப்படுத்திவிட முடியாது.

கடந்த 21-ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்களையும், 4 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுவிட்டனர். இதேபோல் கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதியும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 44 மீனவர்களும், காரைக்காலைச் சேர்ந்த 21 மீனவர்களும் பிடித்துச்செல்லப்பட்டார்கள். அவர்களின் மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏற்கெனவே 107 மீனவர்கள் கடந்த ஒரு மாத காலமாக இலங்கையில் பல்வேறு சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.

ஒரு குடும்பத்துக்கு சம்பாதித்துப் போடும் வீட்டுத்தலைவன் இல்லாததால் அந்த குடும்பத்தினர் சந்திக்கும் வேதனைகளையும், சிரமங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இலங்கை கடற்படையின் மனிதாபிமானமற்ற செயலால் இந்த பரிதாபமான, கண்ணீர் கதைகள் தொடர்கின்றன.

இந்த விஷயத்தில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டாலோ, தமிழக மீனவர்கள் சித்ரவதை பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டாலோ, நிலைமை இன்னும் மோசமடைந்துவிடும். கடந்த காலத்தில் இலங்கை அரசுடன் இந்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளோ, கடித தொடர்புகளோ உரிய பலன்களை தரவில்லை.

கடைசியில் தமிழக முதல்வர், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இந்திய, இலங்கை மீனவர்கள் இடையே டிசம்பர் மாதம் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு யோசனை தெரிவித்து தங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் இனிமேலும் நடந்துவிடாமல் தடுக்கும் வகையில் இரு நாட்டு மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை ஒரு மாதத்தில் நடத்தப்பட்டால்தான் அது பயனுள்ளதாக அமையும்.

இதற்கிடையே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரக்கூடாது என்று இலங்கையை வலியுறுத்துமாறு தங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x