Published : 20 Jun 2017 11:49 AM
Last Updated : 20 Jun 2017 11:49 AM

ஏலம் விடாத இடங்களிலும் ‘பார்க்கிங்’ வசூல்: இருசக்கர வாகனக் காப்பகங்கள் ஆய்வு செய்யப்படுமா?

மதுரையில் மாநகராட்சி ஏலம் விடாத இடங்களில், இருசக்கர வாகனங்களுக்கு ‘பார்க்கிங்’ கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூங்கா நகரான மதுரையின் ஒவ்வொரு சாலையிலும் 24 மணி நேரமும் ஆட்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். ஆனால், மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமலேயே உள்ளது. டவுன்ஹால் ரோடு, நேதாஜி சாலை, தெற்கு குட்ஷெட் தெரு, மாசி வீதி, வெளி வீதி, ஆவணி வீதி, ஆவணி மூலவீதி, தவிட்டுச் சந்தை, தெற்குவாசல், விளக்குத்தூண், சந்தைப்பேட்டை, செல்லூர் மார் க்கெட், ஜெய்ஹிந்த்புரம் முதல் கே.கே.நகர், அண்ணாநகர் வரை மதுரை முழுவதும் பிரதான சாலைகளில் ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள் மற்றும் ஏராளமான சிறிய, பெரிய வியாபார நிறுவ னங்கள் செயல்படுகின்றன.

ஆனால், இந்த நிறுவனங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் தங்கள் வாகன ங்களை நிறுத்த போதிய வசதியில்லை. மதுரை மாநகராட்சி சார்பில் நகரில் 12 இடங்களில் மட்டும் இருசக்கர வாகனக் காப்பகங்கள் நடத்தவும், அங்கு ‘பார்க்கிங்’ கட்டணம் வசூலித்து கொள்ளவும் ஏலம் விட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சியில் ஏலம் விடப்படாத சாலைகளில் ஆங்காங்கே ஆளும்கட்சியினர் போர்வையில் சிலர், இருசக்கர வாகனங்களை நிறுத்த மாநகராட்சி பெயரிலேயே டிக்கெட் அச்சடித்து வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதாக அவ்வப்போது புகார் எழுந்து வருகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அவர்களை அப்புறப்படுத்துவதும் அவர்கள் மீண்டும் அங்கு வசூலில் ஈடுபடுவதும் தொடர்கிறது. கடந்த மாதம், திருமலை நாயக்கர் மகாலில் அங்குள்ள பூங்காவையே இருசக்கர வாகனக் காப்பகமாக மாற்றி, சுற்றுலாப் பயணிகளிடம் அடாவடியாக கட்டணம் வசூலித்தனர்.

இது குறித்து ‘தி இந்து’வில் செய்தி வெளி யிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மறுநாளே அங்கு சென்று பூங்காவில் செயல்பட்ட இருசக்கர வாகனக் காப்பகத்தை அப்புறப்படுத்தினர்.

தற்போது அதுபோல புதுமண்டபம் அருகே நந்தி சிலைக்கு பின்புறம் எழுகடல் தெரு உட்பட மாநகராட்சி ஏலம் விடாத இடங்களிலும் இருசக்கர வாகனங்களுக்கு ‘பார்க்கிங்’ கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி வருவாய் துறை அதிகாரியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: மாநகராட்சியில், சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ‘பார்க்கிங்’ கட்டணம் வசூலிக்க ஆரப்பாளையம் பஸ் நிலையம், விசால் டீ மால் முன்புறம் உள்ள சந்து, பெரியார் பஸ்நிலையம் அருகே பாரதியார் நவீன சிறப்பங்காடி, திருப்பரங்குன்றம் கோயில் அருகே, மாட்டுத்தாவணி பஸ் நிலையம், தமுக்கம் செல்லும் சாலை, மீன் மார்க்கெட், திருநகர், திலகர்திடல், எக்கோ பார்க் மற்றும் மாநகராட்சி வளாகம் போன்ற 12 இடங்களே ஏலம் விடப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி வளாகம் ரூ.4 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதால், அதை யாரும் எடுக்க வரவில்லை. அதனால், மாநகராட்சி வளாகத்தில் மாநகராட்சி ஊழியர்களே கட்டணம் வசூல் செய்கின்றனர். கடந்த மாதம் மகால் முன்புறம் முறைகேடாகச் செயல்பட்ட இரு சக்கர வாகன காப்பகத்தை அப்புற ப்படுத்தினோம். அதன்பிறகு, எந்த இடத்திலும் ஏலம் காலாவதியான இடங்களில் வாகனக் காப்பகம் செயல்படவில்லை. அவ்வாறு செயல்படுவதாக தெரி ந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக் கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘சந்துகளில்’ வசூல்

மழையிலும், வெயிலிலும் நனையாமல் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தவே மாநகராட்சி நிர்வாகம் வாகனக் காப்பகங்களுக்கு அனுமதி அளித்து ‘பார்க்கிங்’ கட்டணம் வசூலிக்க ஏலம் விடுகிறது.

ஆனால், மாநகராட்சியில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம், ஆரப்பாளையம் பஸ் நிலையம் தவிர மற்ற இடங்களில் செயல்படும் வாகன காப்பகங்கள் ரோட்டிலேயே செயல்படுகின்றன. குறிப்பாக விசால் டி மகாலுக்கு எதிரே எவ்வித பாதுகாப்பும் இல்லாத குறுகலான ‘சந்து’ பகுதியில் ‘பார்க்கிங்’ கட்டணம் வசூலிக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. அதனால், வாகனங்கள் அடிக்கடி ‘திருடு’ போகின்றன.

மாநகராட்சி நிர்வாகம், வருமானத்தை மட்டுமே பிரதானமாக பார்க்காமல் முறையாக வாகனக் காப்பகம் நடத்துவோருக்கு மட்டுமே ‘பாக்கிங்’ கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x