Published : 21 Oct 2013 02:54 PM
Last Updated : 21 Oct 2013 02:54 PM
சென்னை மாநகரில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.பி. முனுசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் திரு சைதை துரைசாமி, துணை மேயர் திரு. பா. பெஞ்ஜமின் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பில்: இக்கூட்டத்தில், கால்வாய்களில் தூர்வாரும் பணி சம்பந்தப்பட்ட துறைகளான பொதுப்பணித்துறை, மற்றும் சென்னை மாநகராட்சி ஆகிய துறையினர் கால்வாய்களில் உள்ள தடுப்புகளை அகற்றிவிட்டதாகத் தெரிவித்தனர்.
சென்னை குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கழிவுநீரேற்று நிலையங்கள் நன்கு இயங்கக்கூடிய நிலையில் உள்ளது என்று உறுதி செய்யப்பட்டது. மின்தடை ஏற்படும்போது போதிய ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும், குடிநீரில் தினந்தோறும் குளோரின் அளவு சரியாக இருக்குமாறு ஆய்வு செய்து பார்த்து நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது. தண்ணீரில் கழிவு நீர் கலக்காதவாறு பார்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சியை புயல் மழையில் சாலைகளில் விழும் மரங்களை போக்குவரத்து இடையூறு இல்லாமல் உடனுக்குடன் அகற்ற இயந்திரங்கள், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு அவர்களை நிவாரண மையங்களில் தங்க வைத்தல், அவர்களுக்கு உணவு வழங்குதல், சுகாதாரமான குடிநீர் வழங்குதல், சுரங்கப்பாதைகள் மற்றும் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் உள்ள தண்ணீரை அகற்ற கூடுதல் மோட்டார் இயந்திரங்கள், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற படகு போன்றவற்றை தயார் நிலையில் வைக்க எற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
பருவ மழை காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் காலரா, காய்ச்சல் மற்றும் தொற்று நோய் போன்றவைகள் பரவாமல் கட்டுப்படுத்த முகாம்களை அமைத்து, போதிய அளவுக்கு மருந்துகளும், மருத்துவர்களும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு சுகாதார துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தை, மின்வெட்டு ஏற்படாமல் இருக்கவும், மின்சார கம்பி அறுந்து விழுவதால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும் நடவக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
அவசரகால இலவச தொலைபேசி எண்கள்:
அவசரகால தேவைகளுக்கு சென்னை மாநகராட்சியை 1913 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், தமிழ்நாடு மின்சாரத் துறையை 155333 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், சென்னை மாவட்ட ஆட்சியரை 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், தமிழ்நாடு காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையை 25385599 என்ற எண்ணிலும், சென்னை குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தை 45674567 என்ற எண்ணிலும் பொது மக்கள் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT