Published : 03 Dec 2013 09:33 AM
Last Updated : 03 Dec 2013 09:33 AM

புதிய மின் பாதையால் விரைவில் தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம்

வடமாநில மின் தொடரை இணைக்கும் புதிய பாதை, ஜனவரியில் செயல்படத் தொடங்கும் என்று இந்திய மின் தொடரமைப்புக் கழக திட்ட இயக்குநர் ஐ.எஸ்.ஜா தெரிவித்துள்ளார். இதன்மூலம் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் பெற முடியும்.

நவரத்னா அந்தஸ்து கொண்ட இந்திய மின் தொடரமைப்புக் கழகம், 78 கோடியே 70 லட்சத்து 53 ஆயிரத்து 309 பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. இந்த விற்பனை, இன்று (3-ம் தேதி) தொடங்கி, வரும் 6-ம் தேதி முடிகிறது. நிறுவன முதலீட்டாளர்களுக்கு 5-ம் தேதியும், தனியார் முதலீட்டாளர்களுக்கு 6-ம் தேதிக்கும் பங்குகள் வழங்கல் முடிகிறது.

இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சியில் இந்திய மின் தொடரமைப்புக் கழக திட்ட இயக்குநர் ஐ.எஸ். ஜா கூறியதாவது:

ஒவ்வொரு பங்குகளின் விலை யும் ரூ.85 முதல் ரூ.90 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின் தொடரமைப்புக் கழகம், நாடு முழுவதும் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 540 கி.மீ. மின் தொடர் பாதை மற்றும் 173 துணை மின் நிலையங்களைக் கொண்டு, 32 ஆயிரம் மெகாவாட் மின் விநியோகத்தை கையாள்கிறது.

வடமாநில மின் தொகுப்பை இணைக்கும் புதிய மின் தொடரமைப்பு, ராய்ச்சூர் - சோலா ப்பூர் இடையே அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் உள்ள இரண்டு பாதை களில் ஒரு பாதைக்கான பணிகள் விரைவில் முடிவடையும். முதல் பாதை வரும் ஜனவரி மாதம் செயல்பாட்டுக்கு வரும். இந்தப் பாதை முழு அளவிலான பயன்பாட்டுக்கு வர 6 மாதங்களாகும். இதன் மூலம், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள், வட மாநிலங்களில் இருந்து கூடுதல் மின்சாரம் பெற இயலும்.

மரபுசாரா எரிசக்தி மின்சாரத்தைக் கையாள, ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பில் தனி மின் பாதை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மூன்றில் ஒரு பங்கும், மீதியை வெளி மாநிலங்களும் முதலீடு செய்ய வேண்டும்.

இதேபோல், மின் தொடரில் கசிவு மற்றும் தொழில்நுட்ப பிரச்சினைகளைக் குறைக்கும் வகையில், அதிநவீன தொழில்நுட்ப தொடரமைப்பு அமைக்க, ஐ.ஐ.டி.யுடன் இணைந்து புதிய திட்டம் தயாரித்து வருகிறோம்.

ஸ்மார்ட் கிரிட் எனப்படும் தொழில்நுட்பம் நிறைந்த மின் தொடரமைப்புப் பாதைகள் ஏற்படுத்த 14 முன்னோடித் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஜா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x