Published : 29 Jun 2017 10:04 AM
Last Updated : 29 Jun 2017 10:04 AM
ஜூலை 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் தலைமையில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக மீராகுமாரும் போட்டியிடுகின்றனர். இந்நிலை யில், புதுச்சேரிக்கு வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சியினர், பாஜக வேட்பாளருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் மொத்தம் 30 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள் உள்ள னர். எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸில் 8 எம்எல்ஏக்கள், மக்களவை எம்பி ராதாகிருஷ் ணனும் உள்ளனர். அதேபோல் அதிமுகவில் 4 எம்எல்ஏக்களும், மாநிலங்களவை எம்பி கோகுலகிருஷ்ணனும் உள்ளனர்.
தேர்தலில் எம்எல்ஏக்களின் வாக்குகளுக்கான மதிப்பு மாநிலத்துக்கு மாநிலம் மக்கள் தொகையின் அடிப்படையில் வேறுபடுகிறது. எம்பிக்களின் வாக்கு மாநிலத்துக்கு மாநிலம் மாறாது. ஒரு எம்பியின் வாக்கு மதிப்பு 708 ஆகும்.
புதுச்சேரியில், எம்பிக்கு 708 வாக்குகளும், எம்எல்ஏவுக்கு 16 வாக்குகளும் உள்ளன. அதன்படி, எம்எல்ஏக்களுக்கு மொத்த வாக்குகளே 480 தான். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் எம்பி, அதிமுக எம்பி இருவருக்கும் 1,416 வாக்குகள் உள்ளன. இதில், 2 எம்பிக்களும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 15, திமுக 2, சுயேச்சை எம்எல்ஏ ராமச்சந்திரன், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்போது காங்கிரஸுக்கு நெருக்கமாக இருக்கும் எம்எல்ஏ செல்வம் ஆகியோரின் வாக்குகள் காங்கிரஸுக்கு கிடைக்கும். இவற்றை கூட்டினால் மொத்த மாகவே 304 வாக்குகள்தான் கிடைக்க வாய்ப்புள்ளது.
2 எம்பிக்களின் ஆதரவால், தற்போது புதுச்சேரியில் ஆளும் கட்சியான காங்கிரஸை விட, சட்டப்பேரவையில் ஓரிடத்தில் கூட வெல்லாத பாஜகவே குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிக வாக்குகள் பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT