நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவு வீசுவது போல் மாயை உண்டாக்கப்படுகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் விரும்பும் மாற்று அணி அமையும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும் எம்.பி.யுமான ராஜா தெரிவித்தார்.
புதுவையில் புதனன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ராஜா நமக்களித்த பேட்டி: ‘‘காங்கிரஸும், பா.ஜ.க.வும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளைத்தான் பின்பற்றிவருகின்றன. இவை இரண்டும் அல்லாத மாற்று அணியினர் அரசு அமைக்க இடதுசாரிகள் தீவிரமாக முயற்சித்துவருகின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அப்படி மக்கள் விரும்பும் மாற்று அணி அரசே அமையும்.நாடு முழுவதும் நரேந்திர மோடிக்கு ஆதரவு வீசுவது போல் மாயை உண்டாக்கப்படுகிறது. அவருக்கு ஊடகங்கள் ஆதரவு தந்து அலை வீசுவதுபோல் சித்தரிக்கின்றன. குஜராத் வளர்ச்சியை முன்னோடியாக பின்பற்ற வேண்டும் என அனைவரும் கூறிவருகின்றனர். ஆனால், ரகுராம் ராஜன் குழு அறிக்கையில் குஜராத் நாட்டிலேயே 12-வது இடத்தைத்தான் பெற்றுள்ளது. அந்த மாநிலத்தில் தலித்துகள், பழங்குடியினர் முன்னேற்றம் அடையாமல் உள்ளனர். பெண்களும் குழந்தைகளும் ரத்தசோகைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ளது. பெரிய வர்த்தக நிறுவனங்கள்தான் மோடிக்கு ஆதரவு தருகின்றன.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை செல்லாததாக்கும் வகையில் ஊழல் அரசியல்வாதிகளைக் காப்பாற்றும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டத்தை கொண்டுவர முயன்றது. இதற்கு இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சிகள், மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இதை உணர்ந்த துணைத் தலைவர் ராகுல் காந்தியே அவசரச் சட்டத்தை கிழித்து எறிய வேண்டும் எனக் கூறினார். இந்தப் பிரச்னையில் தனிமைப்படுத்தப்பட்ட காங்கிரஸ் கட்சிக்குத் தற்போதுதான் நல்ல சிந்தனை வந்து அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளது. அதேபோல் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோரி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்’’ என ராஜா தெரிவித்தார்.
WRITE A COMMENT