எலி, கரப்பான்பூச்சி தொல்லையால் அவதிப்படும் ரயில் பயணிகள்


எலி, கரப்பான்பூச்சி தொல்லையால் அவதிப்படும் ரயில் பயணிகள்

சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் வந்து செல்கின்றன. சென்னையில் இருந்து புறப்படும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் உள்பட 20 நீண்டதூர ரயில்கள் (சுமார் 400 பெட்டிகள்) மட்டும் பேசின்பிரிட்ஸில் உள்ள ரயில்வே பணிமனையில் பராமரிக்கப்படுகின்றன.

டெல்லி, ஜெய்ப்பூர் போன்ற நகரங்களில் இருந்து சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களின், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் மட்டும் பணிமனையில் சரிபார்க்கப்படுகிறது.

ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஒரு மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை நிறுத்தி வைக்கப்படும் ரயில்களின் பெட்டிகள் முழுமையாக சுத்தம் செய்யப்படுகின்றன.

ஆனால், ரயில் நிலையத்திற்கு வந்து அரை மணி நேரத்திலேயே புறப்பட்டு செல்லும் ரயில்கள் சென்ட்ரல் வந்து, பயணிகள் இறங்கியதும் ஏ.சி. பெட்டிகளை மட்டும் சுத்தம் செய்கிறார்கள். இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் பொதுப்பெட்டிகளை சுத்தம் செய்வதே இல்லை. ஒரு ரயில், ரயில் நிலையத்திற்கு வந்து பயணிகள் இறங்கிய பிறகு அனைத்துப் பெட்டிகளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், இந்த விதி ஒருபோதும் பின்பற்றப்படுவதில்லை. போதிய ஊழியர்கள் இல்லாததே காரணம் என்று ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.

சென்ட்ரலில் பிளாட்பாரத்திலேயே 35 ரயில்கள் (சுமார் 700 பெட்டிகள்) சுத்தம் செய்யப்படு கின்றன. இதனைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு ரயில் நிலைய மேலாளர், இயந்திரவியல் துறை அதிகாரி, சுகாதாரத் துறை அதிகாரி, மற்றும் ரயில் வணிகத் துறை ஆய்வாளர் ஆகியோருக்கு உண்டு.

ஏ.சி. பெட்டிகளுக்கு சிறப்பு கவனிப்பு

பகல் நேரத்தில் ஓடும் ரயில் பெட்டிகள் சுத்தம் செய்யப்படாதது குறித்து பயணி ஒருவர் கூறுகையில், பகல் ரயிலில் ஏ.சி.பெட்டியை மட்டும் கதவைப் பூட்டிக் கொண்டு சுத்தம் செய்கிறார்கள்.

இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளில் அதுபோல சுத்தம் செய்வதில்லை. அதனால் பெட்டிகள் குப்பை கூளமாக காட்சியளிக்கிறது. கழிப்பறைக்கு போகவே முடியாத அளவுக்கு நாற்றம் அடிக்கிறது என்றார்.

ரயில்வேயின் வெற்று அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் வந்து செல்லும் திருவனந்தபுரம்-கவுகாத்தி, எர்ணாகுளம்-பாட்னா, பெங்களூர்-பாட்னா ஆகிய நீண்டதூர ரயில்களில் ஏ.சி.பெட்டிகூட சுத்தம் செய்யப்படுவதில்லை. சென்ட்ரலுக்கு வரும் பகல்நேர ரயில்களில் வந்த பயணிகள் இறங்குவதற்குள், ஊருக்குச் செல்லும் பயணிகள் ஏறி அமர்ந்து கொள்கின்றனர். அரை மணி நேரம் மட்டுமே ரெயில் நிறுத்தப்படுவதால் பெட்டிகளை முழுமையாக சுத்தம் செய்ய முடியவில்லை. சுத்தம் செய்ய போதிய ஊழியர்களும் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் சொல்லும் காரணம் ஏற்கும்படியாக இல்லை.

ரயில் பெட்டிகள் சுத்தம் செய்யப்படாததால், சிதறிக் கிடக்கும் உணவு, தின்பண்டங்கள், நொறுக்குத் தீனிகள், எலிகள், கரப்பான்பூச்சிகளுக்கு தீனியாகின்றன. எலி, கரப்பான்பூச்சிகளை ஒழிக்க மருந்து தெளிக்கிறார்கள். பொறி வைத்து எலியைப் பிடிக்கிறார்கள். இதை ஒரு கடமையாகச் செய்து கணக்கும் காட்டுகிறார்கள். இருந்தாலும், எலி, கரப்பான்பூச்சிகளின் தொல்லை கொஞ்சமும் குறைந்தபாடில்லை.

எலி, கரப்பான்பூச்சிகளின் தொல்லையை ஒழிப்பதற்காக தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்தில் மட்டும்தான் ஒட்டுமொத்த ரயில் பெட்டியையும் மூடி, நச்சுத்தன்மை கொண்ட புகையை செலுத்தி அனைத்து எலிகள், கரப்பான்பூச்சிகளை ஒழிக்கும் பணி நடக்கிறது. இதற்காக தனியாக ஒரு சேம்பர் கட்டி வைத்துள்ளனர். ஆனால், அந்த சேம்பரில் 3 ரயில் பெட்டிகளை மட்டுமே நிறுத்தி எலி ஒழிப்புப் பணியை மேற்கொள்ள முடிகிறது. அதனால், புகார் அதிகமாக வரும் ரயில் பெட்டிகளை முன்னுரிமை அடிப்படையில் எலி, கரப்பான்பூச்சி ஒழிப்புப் பணியை மேற்கொள்கின்றனர்.

புதர் மண்டிய பணிமனை

எல்லாவற்றிற்கும் மேலாக, ரயில் பெட்டிகள் பராமரிப்புக்கப்படும் சேத்துப்பட்டு, பேசின்பிரிட்ஜ் பணிமனைகளில், ரயில்கள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தில் புல் வளர்ந்து, புதர் மண்டிக் கிடக்கிறது. இங்கிருந்துதான் எலிகள், ரயில் பெட்டிகளுக்கு தாவுகின்றன. இனிமேலாவது ரயில்வே நிர்வாகம் விழித்துக் கொள்ளுமா என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

தூய்மைக்கும் கட்டணம்

2011-ம் ஆண்டுக்கு முன்பு வரை ரயில்நிலையங்களிலும், ஓடும் ரயில்களிலும் உணவு விற்பனையை இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் (ஐ.ஆர்.சி.டி.சி.) கவனித்து வந்தது. அதன்பின்னர் மேற்கண்ட பணியை ரயில்வே நிர்வாகம் எடுத்துக் கொண்டது. சென்னை கோவை துரந்தோ எக்ஸ்பிரஸ், சென்னை டெல்லி துரந்தோ ரயில்களில் மட்டும் உணவு சப்ளை மற்றும் கிளீனிங் வேலையை ஐ.ஆர்.சி.டி.சி. செய்து வருகிறது. சென்னை கோவை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் ஈரோடு தாண்டியதும் உணவு கொடுக்கிறார்கள். சிறிது நேரத்தில் கிளினிங் வேலையை செய்ய வருபவர்கள், பயணிகளிடம் டிப்ஸ் கேட்கிறார்கள். ரயில் டிக்கெட் கட்டணத்துடன் உணவு வழங்கி, சாப்பிட்ட பிறகு அதைச் சுத்தம் செய்யும் பணிக்கான கட்டணமும் சேர்த்தே வசூலிக்கப்படுகிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x