Published : 13 Oct 2013 05:20 PM
Last Updated : 13 Oct 2013 05:20 PM
ஒடிசா பைலின் புயலில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் 18 பேர், பத்திரமாக மீட்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் தூத்தூர், ஏழுதேசம் சின்னத்துறை, இரையுமன்துறை, மேல்மிடாலம் மற்றும் கோடிமுனை பகுதிகளைச் சார்ந்த 18 தமிழக மீனவர்கள், அவர்களது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளில் கடந்த 22-09-2013 முதல் ஒடிசா மாநில கடற்பகுதியிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையிலுள்ள தூத்தூர் மற்றும் அருகிலுள்ள மீன்பிடி கிராமங்களை சார்ந்த மீனவர்கள், இந்தியாவிலேயே தொலைதூர ஆழ்கடல் மீன்பிடிப்பில் தலைசிறந்தவர்கள்.
இவர்களது ஜெய்பவன்புத்ரா மற்றும் ஜெய்பஜ்ரங்பாலி என்ற இரண்டு படகுகள் முறையே IND-OR-07-MM-1203, IND-OR-07-MM-4 என ஒடிசா மாநில மீன்வளத்துறை மூலம் பதிவு செய்யப்பட்டு, கடந்த இரண்டு வருடங்களாக ஒடிசா மாநிலத்தின் அஸ்தரங்கா மீன்பிடி தளத்திலிருந்து மீன்பிடிப்பில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான பைலின் புயல், ஒடிசா மாநிலம் பாரதீப் மற்றும் கோபால்பூர் பகுதியில் கரையை கடக்கவிருப்பதை அறிந்த மீனவர்கள் தங்களது இரு படகுகளுடன் 12-10-2013 அன்று கரை திரும்ப முயன்றுள்ளனர். மேற்படி கடும் புயலின் காரணமாக கடலின் சீற்றம் மற்றும் கடல் அலை அதிக உயரத்திற்கு எழுந்ததாலும், இவற்றுடன் பெருமழை பெய்ததாலும், மீன்பிடி விசைப்படகுகளில் கரை திரும்புவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு நடுக்கடலில் தத்தளித்த வண்ணம் இருந்துள்ளனர். இந்த போராட்டத்தில் இவர்களது படகிலிருந்த எரிபொருள் முழுவதும் தீர்ந்துவிட, தங்களையும் தங்களது படகுகளையும் காப்பாற்றிட கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள உறவினர்களுக்கு கைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேற்படி தகவல் நேற்று பிற்பகல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்த முதல்வர், தலைமை செயலர், கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலர் ஆகியோருக்கு இந்திய கடலோர காவற்படை, கப்பற்படை மற்றும் ஒடிசா மாநில உயர் அதிகாரிகளுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு புயலில் சிக்கித் தவிக்கும் 18 மீனவர்களை பத்திரமாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் உயர் அதிகாரிகள் சென்னையிலுள்ள இந்திய கடலோர காவற் படை மற்றும் கப்பற்படை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் உடனடியாக தொடர்பு கொண்டு நடுக்கடலில் புயலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும், ஒடிசா மாநில சிறப்பு மீட்புபணி ஆணையரையும், ஒடிசா மாநில மீன்வளத்துறை உயர் அலுவலர்களையும் தொடர்பு கொண்டு இம்மீனவர்களை உடனடியாக மீட்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள கடலோர காவற் படை, கொல்கத்தாவிலுள்ள கடலோர காவற் படையினரை தொடர்பு கொண்டு நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்கவும் உடனடியாக மீட்கவும் நடவடிக்கை மேற்கொண்டது.
ஒடிசா மாநிலம் கோபால்பூர் அருகே கரையை கடந்த பைலின் புயலின் சீற்றத்தில் மேற்படி மீனவர்களது படகு சேதமுற்று, அப்படகிலிருந்த 18 மீனவர்களும் ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஜகசன்பூர் மாவட்டத்தின் கடலோர குக்கிராமமான இராமத்துரா எனும் இடத்திற்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர். இக்குக்கிராமமானது புயலின் தாக்கத்தால் தொலைதொடர்பு, போக்குவரத்து மற்றும் மின்சாரம் ஆகியவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்ததால், கரைசேர்ந்த மீனவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி, உணவு மற்றும் குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.
இவ்விவரம் உடனடியாக ஒடிசா மாநில நிர்வாகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, மாவட்ட நிர்வாகமும் கடலோர காவற்படையும் இணைந்து மருத்துவ வசதிகளுடனான மீட்புகுழு அக்கிராமத்திற்கு விரைந்து சென்று 18 மீனவர்களுக்கும் அனைத்துவிதமான மருத்துவ உதவிகளை அளித்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் உடைகளை வழங்கி அவர்களை பத்திரமாக மீட்டு மாவட்டத்தின் தலைமை இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள். தமிழக முதல்வரின் சீரிய முயற்சியால் தமிழகத்தை சேர்ந்த 18 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT