Published : 10 Oct 2013 10:15 AM
Last Updated : 10 Oct 2013 10:15 AM
எதிர்வரும் ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் தி.மு.க.வுக்கு ஆதரவு தர வேண்டும் என்ற அக்கட்சியின் தலைவர் கருணாநிதியின் கணக்கு பலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் பெரும்பாலும் வெற்றி பெற்று வந்திருக்கிறது. அதை கருத்தில் கொண்டும், மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கும் நோக்கிலும் இந்த கணக்கினை கருணாநிதி போட்டுள்ளார்.
இதற்காக, காங்கிரஸ், தேமுதிக, பாஜக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், பாமக, தி.க., விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, எம்ஜிஆர் கழகம் உள்ளிட்ட பல கட்சிகளுக்கும் ஆதரவு கோரி செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
எதிர்பார்த்தபடியே, கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் கைகோர்த்த இரு கம்யூனிஸ்ட் கட்சியினரும், இந்த அழைப்பை ஏற்க மறுத்திருக்கின்றனர். அவர்கள் பா.ஜ.க.வுடன், அ.தி.மு.க. கைகோர்க்காத வரை அந்த அணியில் நீடிப்பதையே விரும்புவார்கள்.
அதேநேரத்தில், தி.மு.க-வுடன் கொண்டிருந்த பிணக்கை, நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவளித்ததன் மூலம் தீர்த்துக் கொண்ட காங்கிரஸ், வழக்கம் போல் மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறது. திமுக-வுடன் கைகோர்க்கும் வாய்ப்புகள் சற்று அதிகமாகவே உள்ளது என்று கட்சிப் பிரமுகர்கள் சிலர் கணித்துள்ளனர்.
அதேநேரத்தில், திமுக-வுடன் மாநிலங்களவை தேர்தலின்போது கூட்டணிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தடாலென தேமுதிக சார்பில் வேட்பாளரை நிறுத்திய விஜயகாந்தும், திமுகவுடன் இந்த இடைத்தேர்தல் கூட்டணியில் சேருவதை விரும்பமாட்டார் என்றே தெரிகிறது. மாறாக, மதிமுக, பாஜக கட்சிகளுடன் கைகோர்க்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், கருணாநிதியின் கடிதத்துக்கு பதில் தருவாரா என்பது சந்தேகமே.
அதேநேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற சிறிய கட்சிகள், திமுக-வுடன் இணை சேரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க பா.ம.க. தலைவர் ராமதாஸோ, சாதி அமைப்புகளுடன் சேர்ந்து தேர்தலை ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவுடன் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். எனவே, பெரும்பாலான பெரிய கட்சிகள் நிராகரிக்கும் நிலையில், கருணாநிதி போட்ட கூட்டணி கணக்கு ஏற்காடு இடைத்தேர்தல் வரை கூட பொருந்தி வராது என்றே கருத வேண்டியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT