Published : 29 Nov 2013 12:00 AM
Last Updated : 29 Nov 2013 12:00 AM
ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 5 பேர் இலங்கை சிறையில் 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்போது விடுதலையாகி தாயகம் திரும்புவர் என கண்ணீருடன் காத்திருக்கின்றன அவர்களது குடும்பங்கள்.
கடந்த 2011, நவம்பர் 28 ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் ராமேஸ்வரம் மீனவர்களான அகஸ்டஸ், எமர்சன், வில்சன், பிரசாத் மற்றும் லாங்நெட். அவர்கள் 5 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்கள் மீது இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தது. அவர்களை விடுவிக்க இங்குள்ள மீனவர்களின் தொடர் போராட்டத்திற்கு பிறகு, அப்பாவி மீனவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்பதை உணர்ந்த தமிழக அரசு, யாழ்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் மூலம் உள்ள 5 மீனவர்களுக்காக தற்போது வழக்கை நடத்தி வருகிறது.
இந்நிலையில் மீனவர்களின் குடும்பங்களை பாம்பனில் சந்தித்தோம்.
மீனவர் பிரசாத்தின் மனைவி ஸ்கெனிடா, ''எங்க வீடுகளப் பார்த்தா போதைப்பொருள் கடத்துறவன் வீடு மாதிரியா இருக்கு. இரண்டு வருசம் ஆகிடுச்சு. வாய்தா மேல வாய்தா போடுதாங்க. என் மூத்த மகன் ஜெயஸ்க்கு இன்னைக்கு மூன்று வயசு. அவனோட முதல் பிறந்தநாளை கொண்டாடிட்டுப் கடலுக்குப் போனவர் இதுவரை வீடு திரும்பல. அப்ப நான் ஆறு மாசம் கர்ப்பமாக இருந்தேன். இரண்டாவது மகன் ரோசனுக்கு இன்னைக்கு ஒன்றரை வயசாச்சு. அவன் முகத்தை கூட இன்னும் அவர் பார்க்கல. தமிழக அரசு எங்க மீது அனுசரணையாத்தான் இருக்கு . இல்லை ன்னா எப்பவோ குடும்பத்தோட செத்துப் போயிருப்போம். இப்ப குழந்தைகள் வளர்ந்துட்டு வர்றாங்க. ரோசன் எல்.கே.ஜி போறான். அவங்க அப்பா பத்தி யாராவது கேட்டா குற்ற உணர்ச்சியில் பிஞ்சிலேயே குறுகிப் போயிடுறான்… என அழத் தொடங்கினார். மத்திய அரசு மனசு வச்சால், எங்க வீட்டுக்காரங்ளோட சேர்த்து ஐந்து பேரும் விரைவில் வீட்டுக்கு வருவாங்க, என்றார் தளராத நம்பிக்கையோடு.
தற்போது இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை சந்தித்த பாம்பன் மீனவர் நேசக்கரங்கள் அமைப்பின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ, ''கடந்த வாரம் பாம்பன் மீனவர்களின் விசைப்படகு மேல் விசாரணைக்கு சென்றபோது, கொழும்பு வெளிக்கடை சிறையில் உள்ள 5 மீனவர்களை சந்தித்தேன். இதில் மீனவர் எமர்சனுக்கு அடிக்கடி மனநிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மத்திய அரசு துரிதப்படுத்தினால், அப்பாவி மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT