Published : 24 Nov 2013 12:00 AM
Last Updated : 24 Nov 2013 12:00 AM

தமிழகத்தில் எட்டு மணி நேரமாக உயர்ந்தது மின்வெட்டு

நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் வடசென்னை புதிய மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் மின் வெட்டு, எட்டு மணி நேரமாக உயர்ந்துள்ளது. இரவு நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

காற்றாலை சீசன் முடிந்த தால், கடந்த நவம்பர் முதல் வாரத்திலிருந்து, 3,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பை, புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் நிலையங்களான வள்ளூர் (1000 மெகாவாட்), வட சென்னை இரண்டாம் நிலை (1200 மெகாவாட்) மற்றும் மேட்டூர் மூன்றாம் நிலை (600 மெகாவாட்) உள்ளிட்டவற்றின் மின் உற்பத்தியைக் கொண்டு சரி செய்யலாம் என, மின் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக மின் உற்பத்தியில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. மீண்டும் எட்டு மணி நேரம் வரை மின் வெட்டை அமல்படுத்தும் நிலைக்கு, மின் வாரிய அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத பொறியாளர்கள் கூறியதாவது:

வடசென்னை புதிய அனல் மின் நிலையத்தின் 600 மெகாவாட் முதல் அலகில், எரிபொருள் கொண்டு செல்லும் பகுதியில் , கடந்த 17ம் தேதி அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதேபோல், இரண்டாம் அலகில் வெப்ப அளவு நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகரித்து, உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சோதனை அடிப்படையில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நடந்த மேட்டூர் மூன்றாம் நிலை புதிய நிலையத்தில், கடந்த 1ம் தேதி முதல், வெப்ப வாயு வெளியேறும் பகுதியில் பிரச்னை ஏற்பட்டு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

வள்ளூர் அனல் மின் நிலையத்தின் முதல் அலகில், நிலக்கரி தட்டுப்பாட்டால் நவம்பர் 14 முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிலையத்தில், ஐந்து அலகுகளில் 520 மெகாவாட்டும், கல்பாக்கம் மற்றும் கைகா அணு மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளால் இரண்டு அலகுகளில் 420 மெகாவாட்டும், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

காற்றாலைகள் ஓரளவு கை கொடுக்கும் என்ற நிலையில், நேற்று அதிகாலையில், காற்றாலை மின்சாரம் பூஜ்யத்திற்கு சென்று, பின்னர் 30 மெகாவாட் உற்பத்தியானது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஜவுளி, பிளாஸ்டிக் துறையை சேர்ந்த தொழிற் கூடங்களில் இதனால் பணிகள் பாதித்துள்ளன. இதைத் தொடர்ந்து உற்பத்திக் குறைவும் தொழிலாளர்களுக்கு பணி பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

சமாளிக்க முடியவில்லை

இதுகுறித்து தொழிற்துறை யினர் கூறுகையில், “எவ்வித அறிவிப்புமின்றி மின்சாரம் தடை செய்யப்படுவதால், நிலைமையை சமாளிக்க முடியவில்லை. மின்வெட்டு நேரம் குறித்து அறிவிப்பு செய்தால், அதற்கேற்ப பணிகளை திட்டமிட முடியும்,” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x