Published : 30 Jun 2017 08:31 AM
Last Updated : 30 Jun 2017 08:31 AM

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 3-வது வாரத்தில் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலை 3-வது வாரத்தில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் பி.இ., பி.டெக். படிப்புகளில் உள்ள சுமார் 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இதற்கு 1.41 லட்சம் பேர் விண் ணப்பித்துள்ளனர். அவர்களது தரவரிசைப் பட்டியல் கடந்த 22-ம் தேதி வெளியிடப்பட்டது. கலந்தாய்வை கடந்த 27-ம் தேதி தொடங்க அண்ணா பல்கலைக் கழகம் திட்டமிட்டிருந்தது.

பொதுவாக, பொறியியல் படிப்பைவிட மருத்துவப் படிப்புக்குதான் மாணவர்கள் அதிக முன்னுரிமை தருவார்கள். இதைக் கருத்தில் கொண்டு, மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்த பிறகு, பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்தமுறை, நீட் தேர்வு முடிவு மற்றும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை பணிகள் தாமதமானதால், ஏற்கெனவே திட்டமிட்டபடி பொறியியல் கலந்தாய்வை 27-ம் தேதி தொடங்க முடியவில்லை.

முதலில் பொறியியல் கலந்தாய்வை நடத்தினால், அதில் தேர்வாகிற மாணவர்கள் பிறகு மருத்துவக் கலந்தாய்வில் இடம் கிடைக்கும்போது படிப்பை மாற்ற வாய்ப்பு உள்ளது. இதனால் காலி இடங்கள் ஏற்படும். அதைத் தவிர்க்கும் விதமாக, மருத்துவக் கலந்தாய்வுக்கு ஏற்ப பொறியியல் கலந்தாய்வு தேதி அட்டவணை மாற்றி அமைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பொறியியல் கலந்தாய்வு பணிகளை ஜூலை 31-ம் தேதிக்குள் முடித்து ஆகஸ்ட் 1-ம் தேதியன்று முதலாண்டு வகுப்பை தொடங்கிவிட வேண்டும். ஆனால், தற்போதைய சூழலில் நீட் விவகாரம் காரணமாக எதிர்பாராத தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொறியியல் கலந்தாய்வுப் பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் கேட்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக் கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அதற்கான பணிகளில் உயர்கல்வித் துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொறியியல் கலந்தாய்வை ஜூலை 3-வது வாரத்தில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக ஜூலை 20 அல்லது 21-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக 30-ம் தேதி (இன்று) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலை. உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x