Published : 23 Jun 2017 08:35 AM
Last Updated : 23 Jun 2017 08:35 AM

சிறைத் துறை காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்தவர்களை விடுவிக்க பரிசீலிக்கப்படும்: அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு

சிறைத் துறை காலிப் பணி யிடங்கள் முழுமையாக நிரப்பப் படும். 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்தவர்களை விடுவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று சட்டம், சிறைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்து, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 2 சட்டக் கல்லூரிகள் அமைப்பதற்கான பணிகள் ரூ.117 கோடியில் நடந்து வருகின்றன. தமிழகத்தில் 1,450 பேருக்கு மட்டுமே ‘நோட்ரி பப்ளிக்’ அனுமதி மத்திய அரசால் வழங்கப்பட்டிருந்தது. தற்போது தேவைக்கேற்ப அனுமதி வழங்கலாம் என்பதால் 2,500 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சிறைகளில் தற்போதுள்ள 14,817 தண்டனைக் கைதிகளில் 6,203 பேர் பல்வேறு நிலைகளில் படித்து வருகின்றனர். இந்த ஆண்டில் பத்தாம் வகுப்பில் 94 சதவீதம், பிளஸ் 2 தேர்வில் 84 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிறைக் காவலர்கள் பற்றாக் குறை உள்ளது உண்மைதான். தற்போது 104 உதவி ஜெயிலர்கள், 1.015 சிறைக் காவலர்களைத் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

முன்னதாக விவாதத்தின்போது பேசிய மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி, ‘‘பூந்தமல்லி சிறையில் உள்ள அப்துல்லா உள்ளிட்ட 16 பேரை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும். கோவை சிறையில் உள்ள அபுதாகீர், திருச்சி சிறையில் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உள்ள மீரான் மொய்தீன் ஆகியோரை விடுவிக்க வேண்டும். மீரான் மொய்தீனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 14 ஆண்டுகளுக்கும்மேல் சிறையில் உள்ளவர்களை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேரத்தில் விடுவிக்க வேண்டும். பேரறிவாளன், ராபர்ட் பயஸ் உள்ளிட்டவர்களையும் விடுவிக்க அரசு பரிசீலிக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:

மீரான் மொய்தீனுக்கு சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகுந்த சிறுநீரகம் தானம் கிடைத்தால் சிகிச்சை அளிக்கப்படும். பேரறிவாளன், ராபர்ட் பயஸ் உள்ளிட்டோரை விடுவிக்க வேண்டும் என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான். அது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், மத்திய அரசு உயர் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றது. மேலும், மத்திய அரசு விசாரித்த வழக்குகளில் அவர்களின் பரிந்துரை பெறாமல் யாரையும் விடுவிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

14 ஆண்டுகளுக்குமேல் சிறை யில் உள்ளவர்களை விடுவிப்பது தொடர்பாக பல எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். முதல்வர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.

இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x