Published : 08 Oct 2014 12:17 PM
Last Updated : 08 Oct 2014 12:17 PM

அதிமுக ஆட்சி அவலங்களை மாவட்ட வாரியாக மக்களிடம் பிரச்சாரம் செய்வோம்: திமுக அறிவிப்பு

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, ஆவின் பால் விற்பனையில் மோசடி, சட்டம், ஒழுங்கு சீர்கேடு, பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட அதிமுக ஆட்சியின் அவலங்களை மாவட்ட வாரியாக மக்களிடம் ஜனநாயக வழிமுறைகளின்படி பிரச்சாரம் செய்யப்படும் என்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

>தமிழக சட்டம், ஒழுங்கை சீரமைக்க மத்திய அரசின் தலையீட்டைக் கோரியும், அதிமுக ஆட்சி அவலங்களைக் கண்டித்து பிரச்சாரம் மேற்கொள்ளவும் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விலைவாசி உயர்வு:

அ.தி.மு.க. ஆட்சியில் அத்யாவசியப் பொருள்களின் விலை, பேருந்து கட்டண, பால் விலை, மின் கட்டணம் என எல்லாவற்றிலும் உயர்வு தான். பதவிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதங்களில் மின்வெட்டே இல்லாமல் செய்வோம் என்றார்கள். அதற்குப் பிறகு பல முறை அதே வெற்று வாக்குறுதியைத் தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்களே தவிர, எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை; வாக்குறுதியை நிறைவேற்றும் வாய்மையும் காணப்படவில்லை. மேலும் ஆட்சிக்கு வந்த இந்த மூன்றாண்டு காலத்திற்குள் இரண்டு முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

திமுக திட்டங்கள் முடக்கம்:

தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துவதிலேயே வக்கிரமான இன்பம் கண்டார்கள். உதாரணமாக தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்தது, பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகத்தை மூடியது, சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்து சட்டம் இயற்றியது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

மக்கள் நலப் பணியாளர்கள் அவலம்:

கழக ஆட்சியில் பணிநியமனம் செய்யப்பட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக சுமார் 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை அ.தி.மு.க. அரசு பதவியேற்ற ஒவ்வொரு முறையும் வீட்டிற்கு அனுப்பி, அதன் காரணமாக 15-க்கு மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள்.

நெய்வேலியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக ஆறு அம்சக் கோரிக்கைகளை முன் வைத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனினும் அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சரோ, அமைச்சர்களோ தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி தீர்வு காண முற்படவில்லை.

மத்திய அரசு திட்டங்கள் நிறுத்தம்:

மத்திய அரசின் திட்டங்களான மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம், எண்ணூர் சென்னை துறைமுகங்கள் இணைப்புச் சாலைத் திட்டம் போன்ற திட்டங்கள் கழக ஆட்சிக் காலத்தில் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, பிரதமரை அழைத்து வந்து தொடங்கியது என்பதால், அந்தத் திட்டங்களைத் தொடராமல் தமிழக அரசு கிடப்பிலே போட்டு வைத்துள்ளது என்று மத்திய அரசின் அமைச்சர்களும், அதிகாரிகளும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

"ஆவின்" பால் விற்பனையில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றது பற்றி ஆதாரங்களோடு செய்திகள் வெளிவந்தும், உரிய நடவடிக்கை காணப்படவில்லை. அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஜனநாயகத்துக்கு வேட்டு:

கடந்த மாதம் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்றங்களின் இடைத் தேர்தல்களில் ஜனநாயகத்திற்குப் புறம்பாக எண்ணற்ற முறைகேடுகள் ஆளுங்கட்சியினரால் கட்டவிழ்த்து விடப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, உற்பத்தி வளர்ச்சி, வேளாண்மை வளர்ச்சி ஆகிய அடிப்படை அம்சங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே கடைசி இடத்திற்குச் சென்று விட்டன என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்களே தெரிவித்துள்ளன.

சட்டம், ஒழுங்கு சீர்கேடு:

அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுக் கிடக்கிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு, பாலியல் குற்றங்கள் பல்கிப் பெருகி விட்டன. எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் மீதும், ஏடுகளின் மீதும் இந்த ஆட்சியில் எண்ணற்ற அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கோ விடிவு காலம் பிறக்கவில்லை. அதைப் போலவே மீனவர்களின் பிரச்சினைகளுக்கும், நெசவாளர்களின் பிரச்சினை களுக்கும், தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கும் எவ்வித தீர்வும் காணப்படவில்லை.

இந்த மூன்றரை ஆண்டுக் காலத்தில் 16 முறை அதாவது சராசரியாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அமைச்சர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். அமைச்சர்கள் மாற்றப்பட்டது போலவே, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இந்த ஆட்சியில் காரணமின்றிப் பந்தாடப்பட்டிருக்கிறார்கள்.

இப்படி இந்த அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்துப் பிரிவினரும் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். யாருடைய வேதனையையும் தீர்ப்பதற்கு இந்த அரசினர் முன் வரவில்லை. எனவே மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்கள், தங்கள் மாவட்டங்களில் இந்தத் தீர்மானத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நிகழ்வுகளையும், மாவட்டங்களில் எழுந்துள்ள மற்ற பல பிரச்சினைகளையும் மக்கள் முன் எடுத்துச் செல்கின்ற பணியிலே ஈடுபடுகின்ற வகையில் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிட வேண்டுமென்று மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

மேலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிலவரங்களைப் பொறுத்து, உள்ளூர்ப் பிரச்சினைகளுக்காக ஆங்காங்கு ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் போன்ற அறப் போராட்டங்களை ஜனநாயக வழிமுறைகளின்படி நடத்துவதென்றும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது. இவ்வாறு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 2-வது தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x