Published : 04 Dec 2013 07:28 PM
Last Updated : 04 Dec 2013 07:28 PM
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே நடந்த ஏற்காடு இடைத்தேர்தலில் 89.24 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஏற்காடு தொகுதியின் தேர்தல் வரலாற்றில் இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவாகும். இது அதிமுக, திமுக கட்சிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும் நோட்டாவில் பதிவான வாக்குகளாக இருக்குமோ என்கிற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஏற்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் சரோஜா, திமுக சார்பில் மாறன் மற்றும் ஒன்பது சுயேச்சைகள் என மொத்தம் 11 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். அங்கு புதன்கிழமை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதி முழுவதும் 120 இடங்களில் 290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. 11 மணி வரை ஏற்காடு மலைக் கிராமங்களில் உள்ள 41 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. ஆனால், மலைக் கிராமங்கள் அல்லாத வாழப்பாடி, முத்தம்பட்டி, அயோத்தியாப்பட்டணம், பாப்பநாயக்கன்பட்டி, தும்பல் உள்ளிட்ட பகுதிகளில் காலையிலேயே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக துவங்கியது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சராசரியாக 200 பேர் வரிசையில் காத்திருந்து ஓட்டுப் போட்டனர். குறிப்பாக, ஆண்களைவிட பெண்கள் மற்றும் முதியோரின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அதிமுக வேட்பாளர் சரோஜா, பாப்பநாயக்கன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். அதேபோல திமுக வேட்பாளர் மாறன், பூவனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மையத்தில் ஓட்டுப் போட்டார்.
வாக்குப்பதிவு கண்காணிப்பு
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டது. வாக்குப்பதிவு நடந்த 290 வாக்குச்சாவடிகளில் 269 வாக்குச்சாவடிகள் இணையதளம் மூலம் கேமராவால் கண்காணிக்கப்பட்டன. இணையதளம் வசதி இல்லாத மலைக்கிராமங்களில் மீதமுள்ள 21 வாக்குச்சாவடிகள் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடிகளில் சாய்வு நடைமேடை அமைக்கப்பட்டிருந்தது.
நான்கு அடுக்கு பாதுகாப்பு
ஏற்காட்டின் அனைத்து தொகுதிகளுமே பதற்றமானவை என்பதால் மூன்று அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டது. மத்திய பாதுகாப்புப் படையினர், துணை ராணுவத்தினருடன் மூவாயிரம் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதுதவிர ஒவ்வொரு 200 மீட்டர் இடைவெளிக்கும் 2 எஸ்.ஐ. தலைமையில் 6 போலீசார் கொண்ட குழுவினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடு குறித்து சேலம் எஸ்.பி. சக்திவேல் கூறுகை யில், “ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தேவைக்கு ஏற்ப நான்கு முதல் 10 போலீசார் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொகுதி முழுவதும் ரோந்து வாகனங்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை” என்றார்.
அதிகபட்ச வாக்குகள் பதிவு
மதியம் 2 மணிக்குள்ளாகவே 67 சதவீதம் வாக்குகள் பதிவானது. மாலை 4 மணிக்கு 86 சதவீதத்தை தாண்டியது. மாலை 5 மணி வரை நடந்த வாக்குப்பதிவில் 89.24 சதவீத வாக்குகள் பதிவானதாக சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஏற்காடு தொகுதி தேர்தல் வரலாற்றில் அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும். கடந்த 2011 சட்டசபை தேர்தலில் 85.66 சதவீத வாக்குகள் பதிவானது.
‘நோட்டா’வுக்கு ஆதரவு?
இந்தத் தேர்தலில் முதல்முறையாக யாருக்கும் ஓட்டு இல்லை என்ற ‘நோட்டா’ பொத்தான், வாக்குப்பதிவு இயந்திரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அதிகபட்ச வாக்குப்பதிவுக்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதிக அளவில் வாக்குகள் பதிவானது தங்களுக்குத்தான் சாதகம் என அதிமுக, திமுக என இரு தரப்பினரும் உற்சாகத்தில் உள்ளனர். ஆனாலும், கூடுதலான வாக்குகள் ‘நோட்டா’வுக்கு விழுந்திருக்குமோ என்ற சந்தேகமும் அவர்களிடம் எழுந்துள்ளது. ‘நோட்டா’வுக்கு எவ்வளவு பேர் ஓட்டு போட்டனர் என்பது எண்ணிக்கையின்போதுதான் தெரியவரும்.
வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, அஸ்தம்பட்டியில் உள்ள சேலம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. வரும் 8-ம் தேதி அங்கு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அதுவரை வாக்கு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பூத் ஏஜென்டுகளும், கட்சிப் பிரதிநிதிகளும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வன்முறை, முறை கேடு புகார்கள் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததால் ஏற்காடு தொகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறுகையில், “ஏற்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.தொகுதியில் 89 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியிருக்கும் என்று நம்பப்படுகிறது” என்றார்.
பிரியாணி, கிடா விருந்து
தீவிர கண்காணிப்பையும் மீறி மேட்டுப் பட்டி தாதனூர், கூட்டாத்துப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் தனியார் தோப்புகளில் காலை தொடங்கி மதியம் வரை பிரியாணி விருந்து, கிடா வெட்டு விருந்துகள் நடந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT