Published : 20 Jun 2017 11:50 AM
Last Updated : 20 Jun 2017 11:50 AM
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் வீடுகள், ஆலைகளில் டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுப்புழு உற்பத்தி இருக்கும் இடம் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ளது.
டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்கு வார்டுக்கு 2 களப் பணியாளர்கள் மற்றும் பெரிய வார்டுகளுக்கு கூடுதல் பணியாளர்கள், நகர்ப்புற செவிலியர், பகுதி சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர், சுகாதார அலுவலர், மருத்துவ அலுவலர், மருத்துவ பூச்சியியல் வல்லுநர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கள ஆய்வின்போது, வீடுகள், ஆலைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் கொசுப் புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மாநகராட்சி மூலம் அபராதம் விதித்தல், குடிநீர் இணைப்பை துண்டித்தல் போன்ற தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் 15-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது 35-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானப் பணி நடைபெறும் ஒரு இடத்தில் கொசுப்புழு உற்பத்தி கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அந்த நபருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல, கொசுப் புழுக்கள் உற்பத்தி கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரச் சட்ட விதிகளின்படி ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். குடிநீர் இணைப்பு துண்டிப்பு, காவல் துறை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் போன்ற தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மேலும், டெங்கு களப்பணியாளர்கள் ஆய்வு செய்ய வரும்போது உரிய ஒத்துழைப்பு கொடுத்து ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். ஆய்வு செய்ய மறுப்பதும், தடை செய்வதும் சட்டப்படி குற்றமாகும்.
பொதுமக்கள் தங்கள் நலத்தையும், சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு, மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவும், விழிப்புணர்வோடு செயல்படவும் வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT