Published : 29 Jun 2017 12:16 PM
Last Updated : 29 Jun 2017 12:16 PM
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை லஞ்சம் வாங்கிக்கொண்டு அதிகாரிகள் அனுமதித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரியுள்ளார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை சென்னையில் அனுமதிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் பெற்றது வருமான வரித்துறை சோதனையில் அம்பலமானது. இது குறித்த செய்தி 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழில் வெளியானது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் இதுகுறித்துப் பேச திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. அனுமதி கிடைக்காததால் தொடர்ந்து அவை வெளிநடப்பு செய்து வந்தன.
சட்டப்பேரவையில் இதுகுறித்து இன்று (வியாழக்கிழமை) பேசிய ஸ்டாலின், முதல்வரின் பதில் திருப்தி அளிக்காததால் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.
அப்போது வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ''தடைசெய்யப்பட்டுள்ள போதைப் பொருளான குட்கா போன்றவற்றை சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் திருட்டுத்தனமாக விற்பனை செய்வதற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் சில அரசு அதிகாரிகள், குறிப்பாக அமைச்சர் ஆகியோர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். அதற்காக லஞ்சப்பணத்தையும் வாங்கி இருக்கின்றார்கள். இதுபற்றி தொடர்ந்து சில தினங்களாக பத்திரிகைகள் – ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக, ’தி இந்து’ ஆங்கில பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக அந்த செய்தியாகவும், அதேபோல ’டைம்ஸ் நவ்’ ஆங்கில தொலைக்காட்சியில் சிறப்புச் செய்தியாக வெளியிடப்பட்டு, அம்பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, இதுபற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் சபாநாயகரிடத்தில் விண்ணப்பித்து இருந்தோம். நேரமில்லா நேரத்தில் நாங்கள் இதுபற்றி பேச முயற்சித்த நேரத்தில், ”நீங்கள் எழுதிக் கொடுத்திருப்பது ஆய்வில் இருக்கிறது, ஆதாரம் இருந்தால் தான் பேசமுடியும்”, என்று சொல்லி எங்களை பேச விடாமல் தடுத்து விட்டார்கள்.
அதன் பிறகு, நேற்றே அதுகுறித்த ஆதாரங்களை எல்லாம் திரட்டி, சபாநாயகரிடம் நேற்றே அவற்றை ஒப்படைத்து, அதுகுறித்து இன்று பேச அனுமதி தரவேண்டும் என்று கேட்டோம். இன்றைக்கு, முழுமையாக இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி கொடுத்தார்.
அதனைப் பயன்படுத்தி நேரமில்லா நேரத்தில், முழுமையாக பேசமுடியாவிட்டாலும் முடிந்தவரையில், சில ஆதாரங்களை அடிப்படையாக வைத்து நான் பேசினேன். அப்படி பேசியபோது நிறைவாக நான் சொன்னது, ”இதில் முறையான – நியாயமான விசாரணை அமைய வேண்டுமென்றால், இந்தக் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து முதலமைச்சர் நீக்கிட வேண்டும். அதேபோல, காவல்துறை உயரதிகாரிகளான, சென்னை கமிஷனராக இருந்த ஜார்ஜ் மற்றும் டி.ஜி.பி., ராஜேந்திரன் மற்றும் அவர்களுக்குக் கீழ் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுத்து, அவர்களையும் பதவிகளில் இருந்து நீக்கிட வேண்டும், அப்போதுதான், முறையான விசாரணை நடைபெறும்”, என்று நான் எடுத்துச் சொன்னேன்.
ஆனால், இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ’பொத்தாம் பொதுவாக’, எதைப்பற்றியும் ஆழமாக, விளக்கமாக எங்களுக்குப் பதில் தராமல், நாங்கள் ஆதாரங்களோடு எடுத்துவைத்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் ஒரு துளியளவு கூட முறையான பதிலைத் தராமல், “வழக்கு இருக்கிறது, அது இருக்கிறது, இது இருக்கிறது, நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றெல்லாம் பூசி மெழுகி முடித்தார். அதுமட்டுமல்ல, சென்னை கமிஷனராக இருந்தா ஜார்ஜ் அவர்கள் 22-12-2016 அன்றே, இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருப்பதாக ஒரு செய்தியை அவர் சொன்னார்.
அது உண்மைதான். ஆனால், அவர் அந்தக் கடிதத்தை அன்றைய தினத்தில் ஏன் எழுதி இருக்கிறார் என்றால், அதற்கு முந்தைய தினமான 21-12-2016 அன்றுதான், அப்போதைய தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகனராவ் அவர்கள் இல்லத்திலும், இதே தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அறையிலும் வருமானவரித்துறை ரெய்டு நடைபெற்றது.
அதாவது முதல் நாள் தலைமைச் செயலாளர் வீடு, அலுவலகத்தில் எல்லாம் ரெய்டு நடக்கிராது. அடுத்த நாள் போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ், தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கா என்றால் இல்லை. இதற்கு நான்கு மாதத்துக்கு முன்பாகவே, 11-08-2016 அன்று வருமான வரித்துறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறது. ஆனால், நான்கு மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு, தலைமைச் செயலாளரின் வீடு, அலுவலகத்தில் ரெய்டு நடந்து முடிந்த பிறகு, அடுத்த நாளே கமிஷனராக இருந்த ஜார்ஜ் கடிதம் எழுதியிருப்பதே ஒரு நாடகம். குட்கா விற்பனை செய்பவர்களிடம் லஞ்சம் வாங்கிய ஜார்ஜ், தானும் தப்பித்துக் கொண்டு, அமைச்சரையும், உயரதிகாரிகளையும் காப்பாற்றுவதற்காக கடிதம் எழுதுவதாக ஒரு நாடக நடத்தப்பட்டு இருக்கிறதே தவிர, வேறல்ல. நான் கேட்க விரும்புவது, ஐ.ஜி., பதவியில் இருக்கும் அதிகாரி டி.ஜி.பி., போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களை எல்லாம் எப்படி விசாரிக்க முடியும்? எனவே, இப்படிப்பட்ட நாடகங்கள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன.
எனவே, நான் மீண்டும் சொல்கிறேன், இதுகுறித்து முறையான விசாரணை நடக்க வேண்டுமென்றா, உடனடியாக சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும். இல்லையென்றால் நியாயம் கிடைக்காது. விசாரணை சரியாக முறையாக நடக்க வேண்மென்றால், சம்பந்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்கிட வேண்டும்.
அதேபோல, குட்கா விற்பனைக்கான லஞ்ச – ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள உயர் போலீஸ் அதிகாரிகளான ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் உள்ளிட்ட மற்ற அதிகாரிகளையும் பதவியில் இருந்து நீக்கி விட்டு, உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும், என்று நான் கேட்டுக் கொள்கிறேன். எனவே, சட்டமன்றத்தில் இதுபற்றி பேசிய முதலமைச்சரின் பதில் எங்களுக்குத் திருப்தியை அளிக்காத காரணத்தால், அவையில் இருந்து தற்காலிகமாக வெளிநடப்பு செய்திருக்கிறோம். இப்போது மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கச் செல்கிறோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT