Published : 24 Jun 2017 03:32 PM
Last Updated : 24 Jun 2017 03:32 PM
மருத்துவப் படிப்பில் 85% இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தோருக்கே ஒதுக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதுதொடர்பான அரசாணை கடந்த 22-ம் தேதி வெளியிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (சனிக்கிழமை) பேசிய அவர், "நீட் தேர்வு பற்றி மத்திய அரசு அறிவித்தவுடன் தமிழகத்தில் ஏற்கனவே உள்ள முறைப்படி மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு செய்ய ஏதுவாக இரண்டு சட்டங்கள் இயற்றினோம். அதை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்து இருக்கிறோம். அது மத்திய அரசின் பரிசீலினையில் இருக்கிறது.
தமிழகத்தில் 'பிளஸ் 2' படித்த 4.2 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி இருக்கிறார்கள். சிபிஎஸ்இ. படித்த மாணவர்கள் 4675 பேர் நீட் தேர்வு எழுதி இருக்கிறார்கள்.
இவர்களுக்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும். சிபிஎஸ்இ படித்த மாணவர்களுக்கு 15 சதவீத இடமும், தமிழக அரசின் பாடத் திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடும் வழங்கி அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. இந்த ஆணை ஜூன் 22-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
அதில் உள் ஒதுக்கீடு அடிப்படையில் தமிழக கல்வித்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு பெரும்பான்மை இடம் கிடைக்கும்.
சட்ட பாதுகாப்பு இருக்கும் வகையில் மிகுந்த கவனத்தோடு இந்த அரசாணையை அரசு பிறப்பித்து இருக்கிறது.
நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். என்றாலும் தமிழக அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் படித்த 85% மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
தமிழகத்தில் 3,677 மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன. எனவே தமிழக அரசின் பாட திட்டத்தின் கீழ் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் பெரும் அளவில் பலன் பெறுவார்கள்" என்றார்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், திமுக முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோரது கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக அவையில் பேசிய துரைமுருகன், "நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் எதிர்காலம் இருளுக்கு தள்ளப்பட்டுள்ளது" என்று விமர்சித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT