Published : 28 Oct 2013 09:37 AM Last Updated : 28 Oct 2013 09:37 AM
புதுச்சேரி: ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு லேப்டாப் திருட்டு
பத்து ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு கவனத்தை திசை திருப்பி ஒரு லேப்டாப் திருடப்பட்டது. மேலும் இரு இடங்களில் சங்கிலி பறிப்பு மற்றும் ரூ.2 லட்சம் கொள்ளை போனது.
புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் திருவாசகம் (52). இவர் சனிக்கிழமையன்று மிஷன்வீதியில் தனது காரை நிறுத்தி விட்டு தீபாவளி இனிப்புகள் வாங்க கடைக்குச் சென்றார். அப்போது காரில் ஓட்டுநர் மட்டும் இருந்தார். அவரிடம் காரின் முன்பு ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடப்பதாக ஒருவர் கூறியுள்ளார். அதை நம்பிய ஓட்டுநர், காரின் முன்பு கிடந்த பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்துள்ளார்.
இனிப்புகளை வாங்கி விட்டு காரில் ஏறிய திருவாசகம் அங்கிருந்த மடிக்கணினி காணாமல் போனதைக் கண்டு ஓட்டுநரிடம் விசாரித்தார். அப்போதுதான் அங்கிருந்த மடிக்கணியை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, பெரியக்கடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நகை பறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காவலராக இருப்பவர் தேஷ்ராஜ். இவரது மனைவி மீனாதேவி (30). அணு மின்நிலைய குடியிருப்பு வளாகத்தில் உள்ள பள்ளியில் படித்துவரும் தனது மகனை, அழைத்துவர வெள்ளிக்கிழமை அப்பள்ளிக்குச் சென்றுள்ளார்.
அப்போது அணுமின்நிலைய ஊழியர் சங்கரின் மகன் பார்த்திபன் (23), அப்பெண்ணின் கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் நகையை பறித்துச் சென்றார். இது குறித்து கல்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, பார்த்திபனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ரூ.1.90 லட்சம் திருட்டு:
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூரைச் சேர்ந்த விவசாயி சுந்தரம் (60). இவர் தனது பெயரில் இருந்த ரூ.1.90 லட்சம் மதிப்பிலான காசோலையை, கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பில் உள்ள வங்கியில் சனிக்கிழமை கொடுத்து பணமாக மாற்றியுள்ளார்.
பணத்தை, தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்துக்கொண்டு புதுப்பட்டினத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அலுவலகம் ஒன்றின் முன்பு வாகனத்தை நிறுத்திய அவர் அலுவலகத்திற்குள் சென்று, திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து கல்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
WRITE A COMMENT