Published : 19 Oct 2014 10:53 AM
Last Updated : 19 Oct 2014 10:53 AM
அரசுப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்க கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறியத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர் கல்வித் தகுதி பெறும்போது அவர்களுக்கு ஊக்க ஊதியம் (இன்சென்டிவ்) வழங்கப்படுகிறது. ஓர் ஊக்க ஊதியம் என்பது 2 வருடாந்திர ஊதிய உயர்வுகளை (இன்கிரிமென்ட்) குறிக்கும். அடிப்படைச் சம்பளம், தர ஊதியம் சேர்த்து வரும் தொகையில் 3 சதவீதமும் அதற்கு இணையான அக விலைப்படியையும் உள்ளடக்கியது ஒரு இன்கிரிமென்ட். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில் அதிகபட்சம் 2 ஊக்க ஊதியங்கள் பெறலாம்.
தேர்வுநிலை அந்தஸ்து
உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படுவதுபோல, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒரே பணியில் இருந்தால் அவர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து (செலக் ஷன் கிரேடு) வழங்கப்படும். அப்போது பணப் பயனாக ஒரு இன்கிரிமென்ட் கிடைக்கும். இதேபோல, தொடர்ந்து 20 ஆண்டுகள் ஒரே பணியில் இருந்தால் சிறப்பு நிலை அந்தஸ்து (ஸ்பெஷல் கிரேடு) அந்தஸ்து அளிக்கப்பட்டு அப்போதும் ஒரு இன்கிரிமென்ட் வழங்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுநிலை அந்தஸ்து பெறுவதற்கு கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை (ஜெனியூனஸ்) பெற வேண்டும். கல்விச் சான்றிதழ்கள் உண்மையா, இல்லையா என்பதை உறுதிசெய்ய உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி, கல்விச் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட கல்வி வாரியத்துக்கும், பல்கலைக் கழகத்துக்கும் அனுப்பப்பட்டு உறுதி செய்யப்படும்.
தேவையற்ற தாமதம்
ஆசிரியர்கள் பணியில் சேரும்போதே கல்விச் சான்றிதழ் களின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டு விடுகிறது. எனவே, தேர்வுநிலை அந்தஸ்து வழங்கும்போது மீண்டும் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆராய்வதால் தேவையற்ற தாமதம் ஏற்பட்டு உரிய காலத்தில் தேர்வுநிலை அந்தஸ்து பெற முடியாமல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
மீண்டும் ஆய்வு வேண்டாம்
இந்த நிலையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு நிலை அந்தஸ்து பெறுவதற்கு இருந்த கட்டுப்பாட்டை பள்ளிக்கல்வித் துறை தற்போது நீக்கியுள்ளது. அதன்படி, தேர்வுநிலை அந்தஸ்து வழங்குவதற்கு முதுகலை ஆசிரியர்களது கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறியத்தேவையில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT