Published : 25 Oct 2013 11:22 AM
Last Updated : 25 Oct 2013 11:22 AM
இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், தமிழக மீனவர்கள் பாதுகாப்புக்கு வழிவகை செய்ய கோரியும் திமுக மற்றும் அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இவ்விவகாரத்தில் மத்திய அரசும், தமிழக மீன்வளத் துறையும் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு தடுத்த நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக நாடாளுமன்ற குழுவின் தலைவர் தம்பிதுரை, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தினர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் : இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க ஐந்து அல்லது ஆறு மாதங்களாவது கவலை அளிப்பதாக தெரிவித்தனர்.
மேலும் மீனவர்கள் நலனுக்காக கடல் எல்லையை மீனவர்கள் கண்டறியும் வசதி ஏற்படுத்தித் தர வாய்ப்பு உள்ளதா எனவும், இப்பிரச்னையை அரசியல் ரீதியாக தீர்க்க வாய்ப்பு உள்ளதா எனவும் கேள்வி எழுப்பினர்.
திமுகவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கட்ரமணி, 'ஜி.பி.எஸ். தொழில்நுட்ப முறை மூலம் கடலில் நாம் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம். இந்த தொழில்நுட்பத்தை தமிழக மீனவர்களுக்கு அரசு தந்தால் பெரும் வழிகாட்டியாக உதவும். அதன் பிறகு அவர்கள் கடலில் எல்லைகளை மீற வாய்ப்பேற்படாது' என நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
இதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் அடுத்த 4 வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழக மீனவர்களின் பிரச்சினைக்காக தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகள் ஒன்றாக நீதிமன்றம் வந்துள்ளது வரவேற்கத்தக்கது என்று கூறி நீதிபதி சதாசிவம், தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT