Published : 13 Dec 2013 08:38 AM
Last Updated : 13 Dec 2013 08:38 AM

பரிந்துரைக்கு லஞ்சம்: ரகசிய வீடியோ வலையில் 2 அதிமுகவினர் உள்பட 11 எம்.பி.க்கள்- கோப்ராபோஸ்ட் தகவல்

பணத்துக்காக பரிந்துரைக் கடிதம் அளிக்க ஒப்புக்கொண்டதாக இரண்டு அதிமுக எம்.பி.க்கள் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.பி.க்கள் பற்றி ரகசிய விடியோ காட்சி வெளியானது.

“ஸ்டிங் ஆபரேசன்” என்ற பெயரில் பல்வேறு ஊழல் விவகாரங்களை ரகசியமாக விடியோ படம் எடுத்து கோப்ராபோஸ்ட் இணையதள ஊடகம் அடுத்தடுத்து அம்பலப்படுத்தி வருகிறது.

இப்போது பணத்துக்காக பரிந்துரைக் கடிதம் அளிக்க முன்வந்ததாக எம்.பி.க்கள் பற்றி கோப்ரா போஸ்ட் வீடியோ காட்சி வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெடிட்டேரியன் ஆயில் என்ற நிறுவனம் வடகிழக்கு மாநிலத்தில் ரூ.1000 கோடி மதிப்பீட்டிலான திட்டத்துக்கு மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் அதற்கு பரிந்துரை செய்யுமாறு குறிப்பிட்ட எம்.பி.க்களை கோப்ராபோஸ்ட் நிருபர் ஆசிஷ் அணுகினார்.

தன்னை அந்த நிறுவனத்தின் ஆலோசகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், கடந்த ஓராண்டாக எம்.பி.க்களை தொடர்ந்து சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அப்போது பரிந்துரைக் கடிதம் அளிக்க வேண்டுமென்றால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.50 லட்சம் வரை லஞ்சம் அளிக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் பேரம் பேசியுள்ளனர். போலியான நிறுவனத்தின் பெயரில் கோப்ராபோஸ்ட் நிருபர் நடத்திய பேச்சு குறித்து யாருக்கும் சந்தேகம் எழவில்லை. நிருபர் போலியாக குறிப்பிட்ட ஆஸ்திரேலிய நிறுவனம் உண்மையானதுதான் என்று கூட எந்தவொரு எம்.பி.யும் விசாரிக்கவில்லை. அவர்களின் முழு குறிக்கோளும் பணம் சார்ந்ததாக மட்டுமே இருந்துள்ளது.

இந்த வகையில் மொத்தம் 11 எம்.பி.க்கள் சிக்கியுள்ளனர். அவர்களில் 6 பேர் பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலரின் பெயருக்கு பரிந்துரைக் கடிதங்களையும் அளித்துவிட்டனர். இந்தச் சந்திப்புகள், உரையாடல்கள் அனைத்தையும் ரகசியமாக விடியோ படம் எடுத்த கோப்ராபோஸ்ட் நிருபர், தற்போது முழுவிவரங்களையும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கோப்ராபோஸ்டின் விடியோ வலையில் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக எம்.பி.க்கள் சி.ராஜேந்திரன் (தெற்கு சென்னை), கே.சுகுமார் (பொள்ளாச்சி) ஆகியோரும் சிக்கியுள்ளனர். இவர்கள் தவிர பாஜகவைச் சேர்ந்த லாலு பாய் பட்டேல், ரவீந்திர குமார் பாண்டே, ஹரி மன்ஜி, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த விஸ்வ மோகன் குமார், மகேஸ்வர் ஹசாரி, பூடியோ சவுத்ரி, காங்கிரஸை சேர்ந்த கிலாடி லால் பைரவா, விக்ரம்பாய் அர்ஜன்பாய், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த கெய்சர் ஜஹான் ஆகியோரும் ரகசிய கேமராவில் சிக்கியுள்ளனர்.

அவர்களில் 6 எம்.பி.க்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரத்துக்காக பரிந்துரைக் கடிதங்களையும் அளித்து விட்டனர். மற்ற ஐந்து பேரும் ரூ.5 லட்சத்துக்கு ஒரு பைசா குறைந்தால்கூட பரிந்துரைக் கடிதம் அளிக்கமாட்டோம் என்று கறாராக கூறியுள்ளனர். அவர்களில் ஒரு எம்.பி. ரூ.50 லட்சம் தந்தால்தான் கடிதம் தருவேன் என்று பிடிவாதமாக இருந்துள்ளார்.

பேச்சுவார்த்தையின்போது சில எம்.பி.க்கள் நேரடியாக பெட்ரோலிய அமைச்சகத்துக்கே வந்து பரிந்துரை செய்யவும் தயாராக இருந்துள்ளனர்.

அனைத்து தகவல்களையும் தங்களது இணையதளத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோப்ராபோஸ்ட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x