Published : 31 Oct 2014 09:15 AM
Last Updated : 31 Oct 2014 09:15 AM
தூக்கு தண்டனை விதிக்கப் பட்டுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர், போதை வஸ்துக்களை கடத்தியதாக இலங்கை அரசால் 2011-ல் கைது செய்யப்பட்டு நடந்து கொண் டிருந்த வழக்கில் இலங்கை நீதிமன்றம் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வரும் நவம்பர் 14-ம் தேதிக்குள் மேல் முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கும் செய்தியாகும். எனினும் இந்த விஷயம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு நடத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும், இது பொய்யாகப் புனையப்பட்ட வழக்கு என்றே தமிழக மீனவர்கள் உணர்வுபூர்வமாக கொந்தளித்துப் போயுள்ளனர். இலங்கை நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை தமிழக மீனவர்களை மட்டுமல்ல, ஓட்டுமொத்த தமிழக மக்களையே மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
இது தொடர்பாக தமிழக மக்களின் உணர்வுகளை பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் தொலைநகல் மூலமாக தகவல் அனுப்பி உடனடியாக இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு இலங்கை அரசுடன் பேசி, தமிழக மீனவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டு கோள் விடுத்துள்ளேன். இது குறித்து இந்திய வெளிவிவகாரத் துறை செயலாளர், உடனடி நடவடிக்கைக்கான வழிமுறைகள் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு நிச்சயம் முயலும் என உறுதியாக நம்புகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT