Published : 30 Jun 2017 08:37 AM
Last Updated : 30 Jun 2017 08:37 AM
தமிழக அரசுப் பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை களை செயல்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் பணிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை, மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இதையொட்டி, தமிழக அரசு ஊழியர்களுக்கும் இப்பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.
இந்நிலையில், கடந்தாண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அலுவலர் குழு அமைத்து இது தொடர்பாக பரிந்துரைகள் பெற்று அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
அவர் கடந்தாண்டு டிசம்பரில் மறைந்த நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், நிதித்துறை செயலர் கே.சண்முகம் தலைமையில் அலுவலர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் உள்துறை செயலர், பள்ளிக் கல்வித்துறை, பணியாளர் மற்றம் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர், உறுப்பினர் செயலர் உமாநாத் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இக்குழுவினர் ஜூன் 30-ம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப் பிக்க வேண்டும் என்று உத்தர விடப்பட்டிருந்தது. இக்குழுவினர் சமீபத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற, பெறாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களை அழைத்து கோரிக்கைகளை பெற்றனர். இக்குழு அறிக்கை அளிப்பதற்கான காலம் இன்றுடன் முடிவதைத் தொடர்ந்து,
மேலும் 3 மாதங்களுக்கு அறிக்கை அளிப்பதற்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை ஓரிரு நாளில் வெளியிடப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT