Published : 17 Oct 2014 10:12 AM
Last Updated : 17 Oct 2014 10:12 AM

வெளி மாநிலங்களுக்கு மின்சாரம் விற்க மீண்டும் தடை: ஒப்பந்தம் செய்த மின் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் உற்பத்தியாகும் அனைத்து வகை மின்சாரத்தையும், வெளிமாநிலங்களுக்கு விற்க, தமிழக அரசு மீண்டும் தடை விதித்துள்ளது. இதனால், ஏற் கெனவே வெளி மாநிலத்தினருடன் ஒப்பந்தம் செய்த மின் உற்பத்தி யாளர்கள் அதிர்ச்சியடைந்துள் ளனர்.

தமிழகத்தின் தற்போதைய குளிர் மற்றும் மழைக்கால மின் தேவையாக 12 ஆயிரம் மெகாவாட் உள்ளது. ஆனால், சுமார் 10,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தினமும் சராசரியாக கிடைத்து வருகிறது.

கடந்த மார்ச் இறுதி முதல் கடந்த செப்டம்பர் இறுதி வரை, சுமார் 3,200 மெகாவாட் வரை தமிழக மின் வாரியத்துக்கு கிடைத்த காற்றாலை மின்சாரம், தென் மேற்கு பருவக்காற்று முடிந்ததால், மீண்டும் நிலையற்ற தன்மைக்கு வந்துள்ளது. தற் போதைய நிலவரப்படி காற்றாலை மின்சாரம் ஒரு மெகாவாட்டிலிருந்து சுமார் 600 மெகாவாட் வரை, 24 மணி நேரமும் நிமிடத்துக்கு நிமிடம் மாறி, மாறி உற்பத்தி யாகிறது. இதனால் மின் தேவையை சமாளிக்கவும், மின் விநியோகத்தை முறைப்படுத்த முடியாமலும், மின் வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், மின் பற்றாக் குறையை சமாளிக்க, மின் வாரிய ஆலோசனையின் பேரில் தமிழக அரசு புதிய முடிவை மேற்கொண் டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக எரிசக்தி முதன்மை செயலர் ராஜேஷ் லக்கானி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அனைத்து மின் நிலையங்களும் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில், வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதாக இருந்தால், அவற்றை தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கோ அல்லது தமிழகத்திலுள்ள திறந்த நிலை மின் தொடர் பயன்பாடு அனுமதி பெற்றுள்ள நிறுவனங்களுக்கோ மட்டுமே வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்துறையினர் கூறும்போது, ஏற்கெனவே, கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரியில் திமுக ஆட்சியின் போது, வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் விற்பதற்கு முதன் முதலாக தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டது. இதன் பின், இந்தத் தடையை விலக்கக் கோரி, தனியார் மின் உற்பத்தியாளர்கள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சார்பில், பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.

குறிப்பாக காற்றாலைகளில் அதிக அளவுக்கு மின்சாரம் உற்பத்தியாகும் போது, அவற்றில் குறிப்பிட்ட அளவை மட்டுமே, தமிழக மின் வாரியம் எடுத்துக் கொண்டது. மீதமுள்ள மின்சாரத்தை உற்பத்தி செய்யவிடாமல் உற்பத்தியை அவ்வப்போது நிறுத்தி வைக்க, மின் நிலையங்களை கட்டாயப்படுத்தினர். இதனால் காற்றாலை உற்பத்தியாளர்கள் மற்றும் சுய மின் உற்பத்தி தொழிற்துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, ஐந்தாண்டு கால போராட்டத்துக்கு பின், கடந்த ஜூன், 2014 முதல், மீண்டும் வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் விற்கலாம் என்று, தமிழக அரசு தடையை விலக்கியது. இதை நம்பி வெளி மாநில நிறுவனங்களுடன் சில மின் நிலையங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. ஆனால், தற்போது, சுமார் மூன்றரை மாதங்களே முடிந்த நிலையில், மீண்டும் வெளி மாநில மின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று அவ்வப்போது மின் வாரியம் முடிவுகளை, மாற்றுவதால், உற்பத்தியாளர்கள் ஏற்கெனவே மேற்கொண்ட வெளி மாநில ஒப்பந்தங்களை செயல் படுத்த முடியாமல், ஒப்பந்த முறிவும், ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் செலுத்த வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x