மதுதான் மனிதத் தன்மையை இழக்கச் செய்கிறது என்று வேதனையுடன் தெரிவித்தார் காந்தியவாதி சசிபெருமாள்.
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற காந்தியத் திருவிழாவில் அவர் மேலும் பேசியது:
உண்மையான அன்பு உள்ளவரிடம்தான் தனிமனித ஒழுக்கம் இருக்கும். புகை, குடிப்பழக்கம் ஆகியன தனிமனித ஒழுக்கத்தைக் கெடுக்கின்றன. தனிமனிதனின் ஒழுக்கக்கேடுதான் ஒட்டுமொத்த சமூகத்தையும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறது. இதை வியத்தகு ஆற்றல்கொண்ட மனிதன் உணர்வதில்லை.
பலரது தியாகத்தால் பெற்ற சுதந்திர இந்தியாவில், 1970க்குப் பிறகுதான் இத்தகைய கருப்பு வரலாறு உருவானது. பெற்றோர் இறந்தால் பிள்ளைகள் இறுதி மரியாதை செய்வதுதான் வழக்கம். ஆனால், மதுவின் தாக்கத்தால் வரலாறு மாற்றப்பட்டுள்ளது.
குடியால் இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு உதவி செய்யலாம். ஆனால், இறந்தவரின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தீமை செய்வது மட்டுமல்ல, அதை தூண்டுவதும் குற்றமே. குற்றம் செய்வோர் தண்டிக்கப்பட வேண்டும் என்றார் சசிபெருமாள்.
நிகழ்ச்சிக்கு, அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவைத் தலைவர் ந.தினகரன் தலைமை வகித்தார். அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை இயக்குநர் அழகப்பா. ராம்மோகன் விழா மலரை வெளியிட்டார்.
காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஞா.பங்கஜம், காந்தி நினைவு நிதி தலைவர் மா.பாதமுத்து, சென்னை மகாத்மா காந்தி நூலக நிறுவனர் கு. மகாலிங்கம் ஆகியோருக்கு, இயற்கை வேளான் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் விருதுகளை வழங்கினார். முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
WRITE A COMMENT