Published : 16 Nov 2013 04:44 PM
Last Updated : 16 Nov 2013 04:44 PM
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கார்த்திகை மாதம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) துவங்குவதையொட்டி, தீப விளக்குகளின் விற்பனை இன்று உச்சத்தை எட்டியது.
மானாமதுரையில் தயாரிக்கப்படும் மண் பாண்டப் பொருள்கள் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டு இசைக்கலைஞர்களையும் கவர்ந்திட, அவர்கள் மானா மதுரைக்கே வந்து கடத்தை வாங்கிச் செல்கின்றனர். இதற்குக் காரணம் வைகை ஆற்றின் மண்.
மானாமதுரையில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த மண்பாண்டங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக குலாலர் தெருவில் மண்பாண்டக் கலைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
இங்கே மண்பானைகள், பூந்தோட்டிகள், அடுப்புகள், சட்டிகள், விளக்குகள் என்று களிமண்ணால் ஆன பல்வேறு கலைப் பொருட்களை தயாரிக்கின்றனர். கார்த்திகை மாதம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) துவங்குவதால் மானாமதுரையில்கார்த்திகை தீப விளக்குகளின் விற்பனை இன்று (சனிக்கிழமை) உச்சத்தை எட்டியது.
காமாட்சி, விளக்கு, தட்டு விளக்கு, ஐந்து முக விளக்கு, வினாயகர் விளக்கு, தேங்காய் விளக்கு, சர விளக்கு என விதவிதமான விளக்குகள் இந்தாண்டு விற்பனையில் முன்னணியில் இருந்தன.
ஐப்பசி மாசம் இறுதி நாளான நேற்று விளக்குகள் மொத்த ஆர்டர் கொடுத்த வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதுகுறித்து நமது செய்தியாளரிடம் பேசிய மண்பாண்ட கலைஞர் மருது, “மானாமதுரையில் செய்யக்கூடிய மண்பாண்ட பொருட்களுக்கு உள்ளுரில் மட்டுமின்றி வெளிமாவட்டங்களிலும் நல்ல பெயர் உள்ளது. குறைந்த விலையில் நல்ல தரத்துடன் நாங்கள் கொடுப்பது தான் இதற்கு காரணம். கடந்த வாரம் சிவங்கை மாவட்டத்தில் மழை இருந்ததால் தீப விளக்குகள் உற்பத்தியில் சற்று சுணக்கம் இருந்தது. இப்போது விற்பனை விறுவிறுப்பாக உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT