Published : 24 Dec 2013 12:00 AM
Last Updated : 24 Dec 2013 12:00 AM
“தமிழக கடலோரப் பகுதி களில் ஆயுதக் கடத்தல் ஏதும் நடைபெறவில்லை” என்று கடலோரப் பாதுகாப்புக் குழும ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
தூத்துக்குடியில் திங்கள்கிழமை செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும், 591 மீனவ கிராமங்கள் உள்ளன. இவற்றில், 35 ஆயிரம் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இந்த பகுதிகளில் கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸார், 24 விரைவு படகுகள் மூலம் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும், 12 கடலோரக் காவல் நிலையங்கள் உள்ளன. மேலும், 30 கடலோரக் காவல் நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் விரைவில் கடலோரக் காவல் நிலையங்களின் எண்ணிக்கை, 42 ஆக உயரும். தமிழக கடற்கரையில், 25 கி.மீ தொலைவுக்கு ஒரு காவல் நிலையம் இருக்கும்.
தமிழக கடலோரப் பகுதிகளில் இந்த ஆண்டில் மட்டும் இது வரை கடலில் தத்தளித்த, 132 மீனவர்களைக் காப்பாற்றியுள்ளோம். 34 படகுகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளோம்.
மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவு பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
தமிழக கடலோரப் பகுதி களில் ஆயுத கடத்தல் ஏதும் நடைபெறவில்லை. அனைத்து கடலோரக் கிராமங்களிலும், கிராம கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடல் பகுதியில் சந்தேகமான எந்த நடவடிக்கை இருந்தாலும் அவர்கள் உடனடியாக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு தெரிவித்துவிடுவர் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT