Published : 19 Sep 2014 10:42 AM
Last Updated : 19 Sep 2014 10:42 AM

கழிப்பறையில் கிடந்த பெண் குழந்தை: வீசிச் சென்ற பெண்ணிடமே ஒப்படைத்த கிராமத்தினர்

தகாத உறவால் பிறந்த குழந்தையை கழிப்பறையில் வீசிச் சென்ற பெண்ணை கிராம மக்களே தேடிப் பிடித்து, அவரிடமே குழந்தையை ஒப்படைத்தனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்களம் கிராமத்தில் உள்ள பெண்கள் கழிப்பறையில் நேற்று காலை குழந்தையின் அழுகுரல் கேட்டது. அழுகுரல் கேட்ட பகுதிக்குச் சென்று பார்த்தபோது, உடல் முழுவதும் ரத்தம் தோய்ந்த நிலையில், தொப்புள்கொடி அகற்றப்படாமல்- பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை கிடந்தது. இதையடுத்து, அந்தக் குழந்தையை கிராம மக்கள் மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைந்தனர்.

பின்னர், அந்தக் குழந்தையின் தாயைக் கண்டுபிடிக்கும் நோக்கில், கிராம மக்கள் சிலர் ஒன்றிணைந்து வீடு வீடாகச் சென்று விசாரித்தனர். அப்போது, கடந்தாண்டு பிளஸ் 2 முடித்த- திருமணமாகாத மாணவிக்கு குழந்தை பிறந்திருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால், அந்த மாணவியோ குழந்தை தனக்குப் பிறக்கவில்லை என்று மறுத்தார். கிராம மக்கள் விடாப்பிடியாக அந்த மாணவியை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் குழந்தை பெற்றதற்கான அறிகுறிகள் மாணவியிடம் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர், வேறு வழியின்றி அந்தக் குழந்தை தனக்குப் பிறந்ததுதான் என்று அந்த மாணவி ஒத்துக் கொண்டார்.

தகவலறிந்து தேனி சமூகநலத் துறை மற்றும் ஜெயமங்கலம் போலீஸார் மேல்மங்களம் கிராமத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அந்த மாணவியையும், குழந்தையையும் தேனி கானாவிலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து ‘தி இந்து’-விடம் சமூகநலத் துறை அலுவலர் (பொறுப்பு) நாகபிரபா கூறும்போது, ‘குழந்தையை தாங்களே வளர்த்துக் கொள்வதாக அந்த மாணவியின் பெற்றோர் போலீஸாரிடம் தெரிவித்தனர். இதனால், வழக்கு பதிவு செய்யப்படவில்லை. தற்போது, அந்த மாணவியை இந்த நிலைக்கு உட்படுத்திய நபர் யார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x