Published : 12 Jun 2019 05:12 PM
Last Updated : 12 Jun 2019 05:12 PM

இந்தித் திணிப்பை எதிர்த்து திமுக பல போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது: ஸ்டாலின் பேச்சு

இந்தித் திணிப்பை எதிர்த்து திமுக பல போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (புதன்கிழமை) சென்னையில் அக்கட்சியின் முன்னோடிகளான மு.இராமநாதன், க.ரா.சுப்பையன் ஆகியோரது உருவப்படங்களைத் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்திய பின்னர் அவர் பேசியதாவது:

"இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பொறுப்பேற்றதற்குப் பின்னால், புதிய கல்விக் கொள்கை என்ற ஒரு வரைவுத் திட்டத்தை தயாரித்து அதில் மும்மொழிக் கொள்கை கொண்டுவர வேண்டும் என்ற ஒரு கொடுமையான செய்தி வந்தது. கடந்த கால தமிழக வரலாற்றை மத்திய அரசு உணராமல் இருக்கிறது.

தமிழ் மொழியைக் காப்பாற்ற, தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் அதற்காகப் போராடி அவர்கள் நடத்திய மிகப் பெரும் போராட்டங்கள் போன்றவற்றையெல்லாம் அவர்கள் உணர்ந்து பார்க்கத் தவறி இருக்கின்றார்கள் என்று தான் நான் கருதுகின்றேன். வரைவுத் திட்டம் அறிவித்தவுடன், சில நிமிடங்களில் தமிழகத்தில் இளைஞர்கள் பொங்கி எழுந்தனர். இளைஞர்கள் கடந்த கால வரலாற்றால் தான் பொங்கினர். திமுக அதற்காகப் பல போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது.

மீண்டும் ஒரு 65-ம் ஆண்டை தமிழ்நாட்டில் உருவாக்காதீர்கள் என்று திமுகவின் சார்பில் என்னுடைய எதிர்ப்பை நான் பதிவு செய்தேன். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களுக்கு தங்களை ஒப்படைத்துக் கொண்டு, முழுமையாக அதில் போரிட்டு இந்த இயக்கத்திற்கும் - இனத்திற்கும் பெருமை சேர்த்து இருக்கக்கூடிய தலைவர்களாக, மு.இராமநாதன், க.ரா.சுப்பையன் இருக்கின்றனர்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x