Published : 19 Sep 2014 09:47 AM
Last Updated : 19 Sep 2014 09:47 AM
பள்ளி மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை செய்த தந்தை-மகன் உட்பட 4 பேர் சென்னையில் கைது செய்யப் பட்டனர். விசாரணையில் அவர்கள் இந்தியா முழுவதும் போலி சான்றிதழ்களை விற்பனை செய்தது தெரிந்தது.
சென்னையில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் போலி சான்றிதழ் விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த போலி சான்றிதழ்களை விற்பனை செய்யும் புரோக்கர்கள் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையிலும், பள்ளிக்கல்வி இயக்குநரக அலுவலகத்திலும் நடமாடுவதாகவும் சென்னை மாநகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வி துறை இயக்குனர் அலுவலகத்தில் போலீஸார் தொடர்ந்து மாறுவேடத்தில் கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக சுற்றிய 2 பேரிடம் போலீஸார் சாதாரணமாக பேச்சு கொடுத்தனர். அவர்கள் இருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். ஒருவர் பெயர் சத்தியமூர்த்தி (45). வியாசர்பாடியைச் சேர்ந்தவர். மற்றொருவர் ஞானவேல் (48). கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர். வந்திருப்பது போலீஸ் என்று தெரியாமல் போலி சான்றிதழ் பற்றிய பேரத்தை இருவரும் தொடங்கினர்.
போலீஸார் தங்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் பி.ஏ. சைக்காலஜி சான்றிதழ் வேண்டும் என்று கேட்டனர். இதற்காக ரூ.25 ஆயிரம் பணத்தையும் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து 2 வாரங்கள் கடந்த நிலையில் புரோக்கர்களே போலீஸாருக்கு போன் செய்து வரவழைத்து போலி சான்றிதழ்களை கொடுத்தனர். அப்போது அவர்களை மடக்கிப் பிடித்த போலீஸார் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். இதில் பல தகவல்கள் வெளிவந்தன.
கொடுங்கையூர் எம்.ஆர். நகர் வடிவுடையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கவுதமன் (57) மற்றும் வியாசர்பாடி எஸ்.ஏ. காலனியில் வசித்து வரும் அவரது மகன் லோகேஷ் (32) ஆகிய இருவரும் போலி சான்றிதழ்களை தயாரித்து புரோக்கர்களான சத்தியமூர்த்தி, ஞானவேல் ஆகியோர் மூலம் விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து கவுதமன் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு போலி சான்றிதழ் தயாரிப்பதற்கு தனியாக 7 கம்ப்யூட்டர்கள், பிரின்டர்கள், கல்வித்துறை முத்திரைகள், சான்றிதழ்களில் ஒட்டப்படும் 20 ஆயிரம் ஹோலோ கிராம் ஸ்டிக்கர்கள் மற்றும் போலி சான்றிதழ் தயாரிக்க பயன்படுத் தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். ஒரு பெரிய அட்டைப் பெட்டியில் போலியாக தயாரிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களின் சான்றிதழ்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அவற்றையும் போலீ ஸார் கைப்பற்றினர்.
கவுதமன் கடந்த 1990-ம் ஆண்டு பள்ளிக்கல்வி இயக்குநரக அலுவலக உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் 5 பிள்ளைகள் உள்ளனர். 2000-ம் ஆண்டில் போலி சான்றிதழ்களை தயாரித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர், தற்போது லேடி வெலிங்டன் உயர்கல்வி பயிற்சியகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
சில நாட்கள் ஒழுங்காக இருந்த கவுதமன் பின்னர் மீண்டும் தனது கைவரிசையை காட்ட தொடங்கினார். 2012 ம் ஆண்டில் இருந்து தனது மகன் லோகேசுடன் சேர்ந்து கொடுங் கையூர் திருவள்ளுவர் நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து போலி சான்றிதழ்களை தயாரித்து வந்துள்ளார். இதற்கு லோகேசின் கம்ப்யூட்டர் படிப்பு மிகப்பெரிய அளவில் அவருக்கு உதவிகரமாக இருந்துள்ளது. இந்த சான்றிதழ்களை புரோக்கர்கள் மூலமாக 15 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை விலைபேசி விற்றுள்ளார். எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் ரூ.15 ஆயிரத்துக்கும், பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் ரூ.20 ஆயிரத்துக்கும், சென்னை பல்கலைக்கழகத்தின் மதிப்பெண் சான்றிதழ்கள் ரூ.25 ஆயிரத்துக்கும், இன்ஜினீயரிங் கல்லூரி சான்றிதழ்கள் ரூ.30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்துள்ளனர்.
10 ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள லோகேஷ் 'வி கம்ப்யூட்டர்ஸ்' என்ற பெயரில் கம்ப்யூட்டர் சர்வீஸ் நிறுவனத்தையும் நடத்தி வந்தார். அவரிடம் இருந்து பத்திரிகையாளர் அடையாள அட்டை ஒன்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். தமிழகம், பெங்களூர், ஆந்திரா, கேரளா மற்றும் ஏராளமான வடமாநில பல்கலைக்கழகங்களின் பெயரிலும் போலியாக சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்துள்ளனர். இதற்காக இந்தியா முழுவதும் இவர்களின் புரோக்கர்கள் உள்ளனர். அவர் களையும் பிடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். போலி சான்றிதழ்கள் தயாரித்ததாக கவுதமன், லோகேஷ், ஞானவேல், சத்தியமூர்த்தி ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
போலீஸார் கூறுகையில், "கல்வித்துறையில் பணியாற்றி யதால் அதில் உள்ள நுணுக்கங்கள் அனைத்தும் கவுதமனுக்கு தெரிந்துள்ளது. தனியார் நிறுவனங்களில் பணியில் சேருபவர்கள்தான் அதிகமாக இவர்களிடம் போலி சான்றிதழ் கேட்டு வாங்கியுள்ளனர்.
அரசு அலுவலகங்களில் போலி சான்றிதழ்களை ஆய்வு செய்து கண்டுபிடிக்க வாய்ப்புகள் அதிகம். அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அதனை கம்ப்யூட்டரில் முதலில் பதிவு செய்து, போலியாக பெயர், மதிப்பெண், வரிசை எண் ஆகியவற்றை பிரிண்ட் எடுத்து அசல் சான்றிதழில் உள்ள பெயர்களை நீக்கிவிட்டு இதனை அதில் சேர்த்து போலி சான்றிதழ்களை தயாரித்துள்ளனர்" என்றனர்.
தண்டனையிலிருந்து தப்பும் குற்றவாளிகள்
தற்போது கைது செய்யப்பட்டுள்ள கவுதமன் 2000-ம் ஆண்டில் இதேப்போல போலி சான்றிதழ் தயாரித்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் 2 ஆண்டுகளில் அந்த வழக்கில் இருந்து விடுதலையாகிவிட்டார். அதன் பின்னரும் அதே மோசடி தொழிலை மீண்டும் செய்திருக்கிறார். இதேபோல போலி சான்றிதழ் வழக்கில் கைது செய்யப்படும் பலரும் வெகு விரைவில் விடுதலையாகி மீண்டும் மீண்டும் கைதாகியுள்ளனர். அவர்கள் உடனே விடுதலையாவதால் ஏதோ ஒரு இடத்தில் தவறு நடப்பது உறுதியாகிறது. அதை உடனே சரிசெய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT