Published : 30 Sep 2014 10:35 AM
Last Updated : 30 Sep 2014 10:35 AM
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட துக்கத்தில் திருவாரூரில் அதிமுக பெண் நிர்வாகி ஒருவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண் டார். இதுபோலவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 பேர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட துக்கத்தில் உயிரிழந்துள்ளனர்.
திருவாரூர், விருப்பாட்சி நடப்பு தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி பாலா(65). இவர் திருவாரூர் நகராட்சி மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதிமுக-வின் 15-வது வார்டு பிரதிநிதியாகவும் செயல்பட்டு வந்தார்.
ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட் டதைத் தொடர்ந்து இரு தினங்களாக எதுவுமே சாப்பிடாமல், தொலைக்காட்சியில் ஜெயலலிதா தொடர்பான செய்திகளை பார்த்துக்கொண்டே இருந்தாராம்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 2 மணியளவில் வீட்டின் மாடியில் உள்ள அறையில் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் பாலா இறந்துகிடந்தார். அந்த அறையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில்,
`தமிழகத்தின் முதல்வராக இருந்த அம்மா சிறையில் இருக்கும்போது நாங்கள் வெளியில் இருக்க விரும்பவில்லை. அம்மா வாழ்க!’ என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் வெலகஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (45). அதிமுக கிளை செயலாளர். இவருக்குத் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து மனமுடைந்து நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி மேல் கொட்டாயைச் சேர்ந்தவர் முருகன்(40). அதிமுக கிளைப் பொருளாளரான இவர், ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கேட்டதிலிருந்து கடந்த 2 நாட்களாக சாப்பிடாமல் இருந்த தாகவும், நேற்று திடீரென மயங்கி விழுந்து இறந்தார் என்றும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT