Published : 17 Sep 2014 06:31 PM
Last Updated : 17 Sep 2014 06:31 PM

‘தெய்வங்களாக’ மாறிய 7 சிறுமிகள்: 60 கிராமத்தினர் இணைந்து நடத்தும் விநோத திருவிழா

மதுரை மாவட்டம், மேலூர் அருகே 60 கிராமங்கள் இணைந்து நடத்தும் விநோத திருவிழாவுக்காக 7 சிறுமிகள் தெய்வங்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலூர் அருகேயுள்ள கிராமம் வெள்ளலூர். மன்னராட்சி காலத்தில் இதனைத் தலைநகராகக் கொண்டு உறங்கான்பட்டி, அம்பலகாரன்பட்டி, மலம்பட்டி, குறிச்சிபட்டி, வெள்ளலூர் ஆகிய மாகாணங்களின் கீழ் 60 கிராமங்களைக் கொண்ட பகுதி வெள்ளலூர் நாடு என அழைக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் மக்கள் இணைந்து வெள்ளலூரில் உள்ள ஏழைகாத்த அம்மன் கோயில் திருவிழாவை ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடி வருகின்றனர்.

அப்போது அம்மனின் 7 அவதாரங்களாக 7 சிறுமிகளைத் தேர்வு செய்து, அவர்களை தெய்வங்களாக நினைத்து வழிபடுவது வழக்கம்.

இதன்படி நடப்பாண்டு திருவிழா நாள் சாத்துதல் எனும் நிகழ்வின் மூலமாக தொடங்கியது. இதையொட்டி வெள்ளலூர் ஏழைகாத்த அம்மன் கோயில் முன் உள்ள மைதானத்தில், தெய்வங்களாக நினைத்து வழிபாடு நடத்தப்படக்கூடிய சிறுமிகளைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 60 கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பருவமடையாத சிறுமிகள் பட்டாடை உடுத்தி கலந்துகொண்டனர்.

முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் முன்னிலையில் அவர்களில் இருந்து 7 பேரை தெய்வங்களாக கோயில் பூசாரிகள் தேர்வு செய்தனர். இவர்கள் ஒரு வார காலத்துக்கு கோயிலிலேயே தங்குவர். சுற்று வட்டார பகுதி மக்கள் இவர்களையும் தெய்வமாக நினைத்து வணங்கிச் செல்லுவர்.

இதுபற்றி வெள்ளலூரைச் சேர்ந்த வெள்ளையன் அம்பலம் கூறும்போது, கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த திருவிழாவை நடத்தி வருகிறோம். இதற்காக ஆண்டுதோறும் 7 சிறுமிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு அம்மனின் நகைகளை அணிவித்து நேரில்வந்த தெய்வங்களாக நினைத்து வணங்கி மகிழ்வோம். இவர்கள் வாரம் முழுவதும் கோயிலிலேயே தங்கி இருப்பர்.

அவர்களுடன் பெற்றோர், உறவினர்களும் கோயிலிலேயே தங்கிக் கொள்ளலாம். பூஜை நடைபெறும்போது கருவறைக்கு முன்பாக சிறுமிகள் இருப்பார்கள். இந்த விழாவின் மூலம் பக்தி, ஒழுக்கம், நன்னெறியை சிறுவர், சிறுமிகள் அறிந்துகொள்ள முடிகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக செப். 30-ம் தேதி மதுகலயம் சுமந்து செல்லுதல், வைக்கோல்பிரி சுற்றி வேண்டுதல் போன்றவை நடைபெறும். அக். 1-ம் தேதி தேரோட்டமும், 3-ம் தேதி மஞ்சள்நீராட்டும் நடைபெறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x