Published : 21 Sep 2014 10:11 AM
Last Updated : 21 Sep 2014 10:11 AM

செல்போனில் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தபோது மலர்ந்தது காதல்: உகாண்டா பெண்ணை மணந்த ஆற்காடு இளைஞர்

உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண்ணை ஆற்காட்டைச் சேர்ந்த இளைஞர் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணி. அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது மகன் கலாநிதி (30). ‘லெதர் டெக்னாலஜி’ முடித்துள்ள இவர், உகாண்டா நாட்டைச் சேர்ந்த இசன்யு ஆரியித் என்பவரை ஆற்காடு அருகே உள்ள விலாரி என்ற கிராமத்தில் உள்ள சுயம்பு சொக்கநாதர் கோயிலில் வெள்ளிக்கிழமை இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

பெற்றோர், உறவினர்கள், ஊர்மக்கள் முன்னிலையில் நடந்த இந்த திருமணம் குறித்து மணமகன் கலாநிதி ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘எனது தந்தை மணி, விளாப்பாக்கத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். தாய் ராதா உதவியாக இருந்துவருகிறார். எனது சகோதரர் நித்யானந்தம் சென்னையில் வேலை செய்கிறார். நான் 2009-ம் ஆண்டு சென்னையில் லெதர் டெக்னாலஜி படிப்பில் டிப்ளமோ முடித்தேன். அதன் பிறகு ஆம்பூரில் வேலை செய்தேன். 2012-ம் ஆண்டு உகாண்டாவில் வேலை கிடைத்தது. எனக்கு ஆங்கிலம் சரளமாக பேச வராது. உகாண்டாவில் மொழி தெரியாமல் தவித்தேன். எங்களுக்கு நடத்திய பயிற்சி வகுப்பில் செய்வது தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். மீண்டும் இந்தியா செல்ல தீர்மானித்தேன். அங்கு நிறைய இந்தியர்கள் இருந்தனர். ஆனால், யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை.

ஆனால், அந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர் பிரிவில் வேலை செய்த இசன்யு ஆரியித் எனக்கு தைரியம் கொடுத்தார். நேரில் பேசிக்கொள்ள முடியாத சூழல் இருந்ததால் எனக்கு செல்போன் மூலம் ஆங்கிலத்தைக் கற்றுக்கொடுத்தார். நாங்கள் அங்கு நல்ல நண்பர்களாக பழகினோம்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நான் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பினேன். அதன்பிறகு நாங்கள் அடிக்கடி செல்போனில் பேசிக் கொள்வோம். அப்போது, என்னை காதலிப்பதாக இசன்யு தெரிவித்தார். முதலில் நான் விளையாட்டாகத்தான் நினைத்தேன். இந்தியாவின் கலாச்சாரம் வேறு என்று கூறினேன். ஆனால், தனது காதலில் அவர் பிடிவாதமாக இருந்தார்.

நாளடைவில் நானும் காதலிக்க ஆரம்பித்தேன். இசன்யுவின் பெற்றோர் உகாண்டா கம்பாலாவில் விவசாயம் செய்கின்றனர். என்னை திருமணம் செய்துகொள்ள இந்தியா வரமுடியுமா என கேட்டேன். சொன்னபடியே அவர் வந்துவிட்டார். என்னை நம்பி இந்தியா வந்த இசன்யுவை கைவிடமாட்டேன். எனது பெற்றோரும் நிலைமையைப் புரிந்துகொண்டு எங்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டனர். இந்தியாவையும் தமிழர்களையும் இசன்யுவுக்கு பிடித்துப் போய்விட்டது. 3 மாதம் சுற்றுலா விசாவில் வந்த அவர், மீண்டும் உகாண்டா திரும்பியதும் எங்கள் பதிவுத் திருமண ஆவணங்களைக் காட்டி இந்திய பிரஜையாக விண்ணப்பிக்க இருக்கிறார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x