Published : 29 Jan 2019 11:54 AM
Last Updated : 29 Jan 2019 11:54 AM

கோடநாடு விவகாரம்: மேத்யூ சாமுவேல் மீதான வழக்கை 4 வாரங்களுக்கு விசாரிக்கத் தடை; உயர் நீதிமன்றம் உத்தரவு

கோடநாடு வீடியோ விவகாரத்தில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க 4 வாரத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதாலேயே இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

இதையடுத்து, ஆவணப்படத்தை வெளியிட்ட மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோர் மீது இரு பிரிவினரிடையே கலவரம் ஏற்படுத்தியது, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சாமுவேல் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த உள்நோக்கமும் இல்லாமல் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டதாக சாமுவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தனக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கொண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், முதல்வருக்கு எதிராக தவறான குற்றச்சாட்டைப் பரப்பியதால், இரு கட்சியினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சட்டத்திற்குட்பட்டு தான் இந்தப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதன் காரணமாக ஆளுநர் மாளிகை முன் திமுகவினர் நடத்திய போராட்டத்தால் போக்குவரத்து முடங்கி பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்ததாக வாதிட்டார். எனவே இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடாது எனவும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா என்பது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் கடந்த 25 ஆம் தேதி ஒத்தி வைத்திருந்தார்.

இதையடுத்து விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி வழக்கு தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். அதுவரை 4 வாரங்களுக்கு மேத்யூ சாமுவேல் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதித்தும் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x