Published : 29 Nov 2018 09:23 AM
Last Updated : 29 Nov 2018 09:23 AM

16 எழுத்துகளுக்கு மேல் இருக்கும் பயணிகள் பெயர்களில் ரயில் டிக்கெட் முன்பதிவில் சிக்கல்: மாற்று ஏற்பாடு செய்யப்படும் என ஐஆர்சிடிசி உறுதி 

ஐஆர்சிடிசி இணையதளத்தில் 16 எழுத்துகளுக்கு மேல் இருக்கும் பயணிகள் பெயர்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ரயில்களில் டிக்கெட் கிடைப் பதில் எப்போதும் கடும்போட்டி இருக்கிறது. இணையதளம் வசதி கொண்ட செல்போன் பயன்பாடு மக்களிடம் அதிகரித்து வருவதால், பயணிகளுக்கு பல் வேறு சேவையை ரயில்வே வழங்கி வருகிறது. இதனால், இணையதளத்தில் டிக்கெட் பெறுவோரின் எண்ணிக்கை 70 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் 16 எழுத்துகளுக்கு மேல் இருக்கும் பயணிகளின் பெயர்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறியதாவது:

நம் நாட்டில் சிலர் பெற்றோர் பெயருடன் இணைத்துக் கொண்டு பெயர்களை வைத்துள்ளனர். இதனால், நீண்ட பெயருடன் அவர்களின் பெயரில் அதிக அளவில் எழுத்துகள் இருக்கின்றன.

ஆதார், பான் அட்டையிலும் தந்தை பெயருடன் இணைத்தே ஆவணங்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், 16 எழுத்து களுக்கு மேல் இருக்கும் பயணி களின் பெயர்களைக் கொண்டு ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை. முழு கட்டணத்துடன் பயணிக்கும்போது கூட, முதல்பெயரில் மட்டுமே முன்பதிவு செய்து பயணம் செய்ய முடிகிறது.

அப்போது, டிக்கெட் பரிசோதகரிடம் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. ஆனால், ரயில்வே அளிக்கும் சலுகை அட்டையைப் பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, 16 எழுத்துகளுக்கு மேல் இருக்கும் பயணிகள் பெயர்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை.

படுக்கை ஒதுக்கீட்டில் பிரச்சினை

முதியோர், மாற்றுத்திறனாளி கள், கர்ப்பிணிகள், நோயாளி கள் ரயில்களில் பயணம் செய்யும் போது, பெரும்பாலும் கீழ்படுக்கை வசதி கிடைப்பதில்லை. இதனால், அவர்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். டிக்கெட் முன்பதிவின்போது கீழ்படுக்கை வசதி பெற முன்பதிவு செய்தால், அந்த டிக்கெட் கிடைப்பதில்லை.

அதற்கு மாறாக நடுப்பகுதி அல்லது மேல்பகுதியில்தான் படுக்கை வசதி கிடைக்கிறது. இதனால், பயணம் செய்ய முடியாமல் டிக்கெட்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படு கிறது. வழக்கமாக ரயில் டிக் கெட் முன்பதிவு செய்யும்போது இருப்பது போல் முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு கீழ்படுக்கை விபரங்களை வெளிப் படையாக தெரியப்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "பயணிகள் குறித்து நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மேலும், இதற்கான மாற்று ஏற்பாடு செய்ய சாஃப்ட்வேரில் புதியதாக பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றார். நம் நாட்டில் சிலர் பெற்றோர் பெயருடன் இணைத்துக் கொண்டு பெயர்களை வைத்துள்ளனர். இதனால், நீண்ட பெயருடன் அவர்களின் பெயரில் அதிக அளவில் எழுத்துகள் இருக்கின்றன.ஆதார், பான் அட்டையிலும் தந்தை பெயருடன் இணைத்தே ஆவணங்கள் வழங்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x