Published : 18 Aug 2014 11:27 AM
Last Updated : 18 Aug 2014 11:27 AM
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புச் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பாக அனைத்து மாநிலங்களுக்கிடையே ஒருமித்த கருத்து உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் தேவைகள் தொடர்பாக தங்களிடம் கடந்த ஜூன் 3-ம் தேதி கொடுத்துள்ள கோரிக்கை மனுவில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் (ஜிஎஸ்டி) தமிழகம் போன்ற மாநிலங்கள் நிதி இழக்கும் அபாயம் பற்றியும், மாநிலங்களின் நிதி அதிகாரம் பறிக்கப்படும் நிலை குறித்தும் குறிப்பிட்டிருந்தேன்.
அதைத் தொடர்ந்து, அது தொடர்பான திருத்தப்பட்ட வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு, எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனது கோரிக்கையை ஏற்று, ஜிஎஸ்டி-யில் இருந்து மதுபானங்கள், உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகள் உள்ளிட்ட மேலும் சில அம்சங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், மேலும் பல கவலை தரும் அம்சங்களுக்கு தீர்வு காணப்படவில்லை. அதில், மாநிலங்களுக்கான நிதி அதிகாரம் முதன்மையானதாகும்.
அனுமதிக்க வேண்டும்
பரிந்துரை செய்யப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலின் பணிகள், மத்திய மாநில சட்ட அதிகாரத்தை மிஞ்சும் வகையில் இருக்கிறது. இதை தமிழக அரசால் ஒருபோதும் ஏற்க முடியாது. திருத்தம் செய்யப்பட் டுள்ள வரைவு மசோதாவில், மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் மீது அதிக வரிகள் விதிக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு தொடர்ந்து அனுமதிக்க வேண்டும்.
பெட்ரோலிய பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரி முறையில் கொண்டு வந்தால் அது மாநிலங்களுக்கு மிகப் பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்திவிடும். எனவே, பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு வரம்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மத்திய அரசு தனது மானிய சுமையை குறைப்பதற்காக, எல்லா பெட்ரோலிய பொருட்களையும் வாட் வரி விதிப்பு சரக்குகளாக மாற்றினால், அது மாநிலங்களின் வருவாயில் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தி விடும். இப்பரிந்துரையை தமிழக அரசால் ஏற்க முடியாது.
உறுதிமொழி அளிக்கவில்லை
தமிழகம் போன்ற உற்பத்தி சார்ந்த மாநிலங்களில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டால் அது நிரந்தரமான வருவாய் இழப்புக்கு வழிவகுக்கும். இந்த இழப்புக்கு நிரந்தர காப்பீடு போன்ற எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை. இதனால், நேரத்துக்கு நேரம் மாறும் மத்திய அரசின் கொள்கையால் மாநில அரசுகள் பாதிக்கப்படலாம்.
சரக்கு மற்றும் சேவை வரி முறைகள் தொடர்பாக மாநில நிதியமைச்சர்களைக் கொண்ட அதிகாரமளிக்கப்பட்ட துணைக் குழுக்கள் இன்னும் தங்களது அறிக் கைகளை சமர்ப்பிக்க வில்லை என்று அறிகிறேன். தாங்கள் இரண்டு வரிவிதிப்பு அமைப்புகளுக்கு வரி செலுத்த நேரிடுமோ என்ற அச்சம், வாட் வரியை அமல்படுத்தியுள்ள மாநிலங்களிடையே ஏற்பட்டுள்ளது. எனவே, வாட் வரி விதிப்பு முறையை மாநிலங்களே பெருமளவு மேற்கொள்ளும் வகையில் எளிமைப்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும்.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில் மிக முக்கிய பிரச்சினைகளாக உள்ள இரு அமைப்பு வரிவிதிப்பு முறை, விரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டிய பொருள்கள் போன்ற பல்வேறு அம்சங்களில் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT